இலங்கையில் கையிருப்பிலுள்ள எரிபொருள் இம்மாத இறுதிக்குள் தீர்ந்துபோகும் நிலை ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டிற்கு நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை, மின்வெட்டு, அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காததால் மக்கள் நாள்தோறும் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லாததால் கடந்த நவம்பர் மாதம் முதல் டீசலை இறக்குமதி செய்யமுடியாமல் இலங்கை தவிக்கிறது.
பொதுப்போக்குவரத்து, அனல்மின் நிலையங்களில் டீசலே பயன்படுத்தப்படும் நிலையில், இலங்கையின் எரிபொருள் தேவைக்காக 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை அளித்து இந்தியா உதவிக்கரம் நீட்டியது. ஏற்கெனவே இலங்கைக்கு இந்தியா, டீசல் அனுப்பிய நிலையில் வரும் 15,18 மற்றும் 23 ஆம்தேதிகளில் மேலும் 3 கப்பல்களில் டீசல் அனுப்ப உள்ளது.
எனினும் தேவை அதிகரிப்பால், இலங்கையின் டீசல் நிலையங்கள் இம்மாத இறுதிக்குள் வறண்டு போகும் சூழல் உருவாகியுள்ளது. இதோடு மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடும் இலங்கையின் நிலையை மேலும் சிக்கலாக்கியுள்ளது. அவசரகால உயிர்காக்கும் சிகிச்சைகள் மட்டுமே தற்போது வழங்கப்படும் நிலையில், இன்னும் சில நாட்களில் அவசர சிகிச்சைகளைக்கூட மேற்கொள்ள முடியாத அளவுக்கு மருந்து தட்டுப்பாடு ஏற்படும் என்று இலங்கை தேசிய மருத்துவக்கழகம் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதம் எழுதியுள்ள மருத்துவர்கள், இதே நிலை நீடித்தால் மருந்தின்றி ஆயிரக்கணக்கான உயிர்கள் பறிபோகும் என்று எச்சரித்துள்ளனர்.