உலகம்

தொடரும் பெட்ரோல் தட்டுப்பாடு: ராணுவ கட்டுப்பாட்டுக்கு கீழ் இலங்கை எரிபொருள் மையங்கள்

தொடரும் பெட்ரோல் தட்டுப்பாடு: ராணுவ கட்டுப்பாட்டுக்கு கீழ் இலங்கை எரிபொருள் மையங்கள்

நிவேதா ஜெகராஜா

“இலங்கையில் பெட்ரோலுக்காக மக்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய சூழல் தற்போதைக்கு முடிவுக்கு வராது” என அந்நாட்டின் ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித, “எரிபொருள் மையங்களில் ராணுவத்தினர் நிறுத்தப்படுவர் என்ற அரசின் அறிவிப்பு பெட்ரோல் தட்டுப்பாடு தற்போதைக்கு முடிவுக்கு வராது என்பதையே காட்டுகிறது. இந்தியாவிடம் இருந்து கடனுதவி கிடைத்தபின்பும் எரிபொருள் பிரச்னை முடிவுக்கு வரவில்லை. ஏற்கனவே நீண்ட வரிசையில் காத்திருந்து நான்கு உயிர்கள் பறிபோன பின்பே எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது” என்றும் ஆனந்த பாலித கூறினார்.

முன்னதாக இலங்கை தனது கடுமையான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, இந்தியாவிடம் கடன் பெற்றிருக்கிறது. இருப்பினும் இந்தியா அளித்த கடனுதவியை இலங்கை அரசு தவறான வழியில் பயன்படுத்துவதாக அந்நாட்டு எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சி குற்றஞ்சாட்டி இருந்தது. அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச இக்குற்றச்சாட்டை நாடாளுமன்றத்தில் முன்வைத்திருந்தார். இந்தியா மட்டுமன்றி, சீனாவிடமும் இலங்கை கடனுதவி கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.