அமெரிக்காவில் அதிபர் தேர்தல், இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்று (நவ.5) அங்கு தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்வும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபரான கமலா ஹாரிஸும் களத்தில் உள்ளனர். கமலா ஹாரிஸுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக பல்வேறு கருத்துக்கணிப்புகளும் கூறினாலும், தேர்தலே முடிவு செய்யும். இந்த நிலையில், அமெரிக்காவில் அணில் ஒன்று தேர்தல் பிரசாரத்திலும் பேசுபொருளாகி உள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கைச் சேர்ந்தவர் மார்க் லாங்கோ. இவர் பீனட் (Peanut) என்ற அணிலை வளர்த்து வந்துள்ளார். இது, உலகம் முழுவதும் பிரபலம். இதற்கென ஃபாலோயர்ஸ்களே உள்ளனர். இந்த அணிலுடன் ரக்கூன் என்ற மற்றொரு விலங்கும் மனிதர்களுடன் குடியிருப்பில் வசித்து வந்துள்ளது. இதனால், அங்குள்ளவர்களுக்கு ரேபீஸ் நோய் தாக்கும் அபாயம் இருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்பேரில் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் அதைக் கைப்பற்றி, கருணைக் கொலை செய்துள்ளனர். மனிதர்களுக்கு நோய் ஆபத்தை விளைவிக்கும் என்பதால் அவையாவும், கருணைக்கொலை செய்யப்பட்டதாகக் காரணம் கூறப்பட்டது. எனினும், இவ்விலங்கை கொல்வதற்கு யார் அதிகாரம் கொடுத்தது எனக் விலங்கு நல ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால், இச்சம்பவம் அமெரிக்காவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் தேர்தல் நேரத்தில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.
இதுகுறித்து உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா சிஇஓவுமான எலான் மஸ்க், "அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த அணில்களை நிச்சயம் காப்பாற்றுவார்" என பீனட் அணிலுக்கு இரங்கல் தெரிவித்திருந்தார். இவர், டொனால்ட் ட்ரம்புவின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மற்றொரு பயனரின் பதிவுக்கு பதிலளித்துள்ள எலான் மஸ்க், "அறிவற்ற மற்றும் இதயமற்ற கொல்லும் இயந்திரமாக அரசு உள்ளது" எனச் சாடியிருந்தார். இதனால், இந்த விவகாரம் அதிபர் தேர்தலிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே அமெரிக்க அரசை விமர்சித்து வரும் எலான் மஸ்க், இந்தப் பிரச்னையையும் கையில் எடுத்துள்ளார். அதனால் இது அதிபர் தேர்தலில் எதிரொலித்துள்ளது. இந்த அணில் கருணைக்கொலை சம்பவம், கமலா ஹாரிஸ் பிரசாரத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, குடியரசுக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் ஜே.டி.வான்ஸ் “எந்த அரசாங்கம் ஆயிரக்கணக்கான சட்டவிரோத குடியேற்ற குற்றவாளிகளைக் கண்டுகொள்ளவில்லையோ, அதே அரசாங்கம் நாம் வளர்ப்புப் பிராணிகளை வைத்துக்கொள்ளக் கூடாது என்று கூறுகிறது. இது கேலிக்குரிய செயல்” என விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.