உலகம்

டெல்லி வன்முறை குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் கவலை

டெல்லி வன்முறை குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் கவலை

webteam

டெல்லி வன்முறை பெரும் கவலையை ஏற்படுத்தியிருப்பதாக ஐநா மனித உரிமைகள் ஆணை‌ய தலைவர் மிச்செல் பேக்லெட் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள வடகிழக்கு பகுதியான ஜாஃபராபாத்-தில் சிஏஏ-வுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் சிஏஏ-வுக்கு ஆதரவாகவும் பேரணி நடைபெற்றபோது, கடந்த திங்களன்று இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. கற்கள், கட்டைகளை கொண்டு இருதரப்பினரும் கடுமையாக தாக்கிக் கொண்டனர். மேலும் டெல்லியின் வடகிழக்கு பகுதிகளுக்கு வன்முறை பரவி ஆங்காங்கே கடைகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதோடு தீவைத்து கொளுத்தப்பட்டன.

டெல்லியில் வெடித்த கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. கலவர பூமியாக காட்சியளித்த அந்நகரம் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், டெல்லி வன்முறை பெரும் கவலையை ஏற்படுத்தியிருப்பதாக ஐநா மனித உரிமைகள் ஆணை‌ய தலைவர் மிச்செல் பேக்லெட் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் பேசிய அவர், இந்தியாவின் நீண்டகால பாரம்பரியமான மதச்சார்பின்மை காக்கப்பட வேண்டுமென தெரிவித்தார்.

டெல்லி வன்முறையில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடுக்கவில்லை எனவும், அமைதியாக போராடியவர்கள் மீது பலப்பிரயோகம் நடத்தியதாகவும் தமக்கு தகவல்கள் கிடைத்திருப்பது வேதனை அளிப்பதாகக் கூறியுள்ளார். மேற்கொண்டு வன்முறைகள் நிகழா வண்ணம் முன்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அரசியல் தலைவர்களை மிச்செல் பேக்லெட் கேட்டுக்கொண்டுள்ளார்.