ஸ்பெயின் அரசியலில் அதிரடி திருப்பமாக தனி கேட்டலோனியாவுக்காக குரல் கொடுத்த இரு முக்கிய தலைவர்கள் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேட்டலோனியா தனி நாடு கோரி நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பின்போது 90 சதவிகித வாக்காளர்கள் ஸ்பெயினில் இருந்து கேட்டலோனியா பிரிந்து செல்ல ஆதரவு அளித்து வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து தனி நாடு தொடர்பான அறிவிப்பை வெளியிடப் போவதாக கேட்டலோனியா தலைவர் கார்லஸ் அறிவித்தார். இதற்காக கடந்த வாரம் கேட்டலோனிய சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை கூட்டிய அவர், விடுதலை பிரகடனத்திலும் கையெழுத்திட்டார். இருப்பினும் தனி கேட்டலோனியா தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிடவில்லை. இதனால் குழப்பம் அடைந்த ஸ்பெயின் அரசு, இந்த விவகாரத்தில் தெளிவான முடிவை தெரிவிக்கும்படி உத்தரவிட்டு 6 நாட்கள் கெடு விதித்தது.
அந்த கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தனி நாடு கோரி தீவிரமாக போராடிய கேட்டலோனியாவின் இரு முக்கிய தலைவர்களான சான்ஹீஸ் மற்றும் குய்ஸார்ட்ஸை ஸ்பெயின் காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் ஆவேசம் அடைந்துள்ள கேட்டலோனியா ஆதரவாளர்கள், அவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி பார்சிலோனாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கேட்டலோனியாவுக்கு விடுதலை வழங்கும்படி அவர்கள் முழக்கமிட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதற்கிடையே, அமைதியான முறையில் போராட்டம் நடத்தியதற்காக ஸ்பெயின் அரசு கேட்டலோனியா தலைவர்களை அரசியல் கைதிகளாக மீண்டும் சிறையில் அடைத்துவிட்டது என கேட்டலோனியா பிராந்திய தலைவர் கார்லஸ் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.