உலகம்

முதன்முறையாக வடகொரியா சென்ற மூன் ஜே இன்

முதன்முறையாக வடகொரியா சென்ற மூன் ஜே இன்

webteam

முதன்முறையாக வடகொரியா சென்ற தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னுக்கு விமான நிலையத்தில் கட்டியணைத்து உற்சாக வரவேற்பு கொடுத்தார் கிம் ஜாங் உன்.

சிங்கப்பூரில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பு‌க்கும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கும் இடையே வரலாற்று சிறப்பு வாய்ந்த சந்திப்பு நடந்தது. அப்போது கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிராந்தியமாக உருவாக்குவதாக, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உறுதியளித்திருந்தார். இதைத்‌தொடர்ந்து இரு நாட்டுக்கும் இடையே நட்புறவு சீரடைந்து வருகிறது. மேலும் வடகொரியா அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பாக, தென்கொரியா பேச்சுவார்த்தை நடத்தி, அதில் முன்னேற்றம் கொண்டு வர வேண்டும் என அமெரிக்கா கேட்டுக் கொண்டது. 


அதன் அடிப்படையில் வடகொரியாவுடன் இருமுறை தென்கொரியா பேச்சுவார்த்தை நடத்தியது. இந்நிலையில், மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்காக தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், முதன்முறையாக வடகொரியா சென்றுள்ளார். தலைநகர் பியாங்யங் விமான நிலையத்தில், அவர் தரையிறங்கியதும், அதிபர் கிம் ஜாங் உன் அவரை உற்சாகமாக கட்டியணைத்து வரவேற்றார். வடகொரியா அதிபராக கிம் ஜாங் உன் பதவியேற்ற நாளில் இருந்து இதுவரை எந்தவொரு உலக நாட்டுத் தலைவர்களையும் அவர் விமான நிலையம் சென்று நே‌ரடியாக வரவேற்றதில்லை. முதன்முறையாக தென் கொரிய அதிபரை நேரடியாக சென்று அவர் வரவேற்றிருப்பதால், கொரிய தீபகற்பத்தில் அமைதி ஏற்படுத்துவதற்கான முயற்சியில் நிச்சயம் முன்னேற்றம் ஏற்படும் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.