உலகம்

கத்தார் கால்பந்து உலகக் கோப்பையில் விளையாடும் ’தன்பாலின கலாச்சாரம்’! எதிர்ப்பு ஏன்?

கத்தார் கால்பந்து உலகக் கோப்பையில் விளையாடும் ’தன்பாலின கலாச்சாரம்’! எதிர்ப்பு ஏன்?

kaleelrahman

2022 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை கத்தாருக்கு வழங்கியது தவறு என்று சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிஃபா) முன்னாள் தலைவர் செப் பிளாட்டர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுக்க அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டாக பார்க்கப்படுவது கால்பந்து. மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் போன்ற வீரர்கள் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற வீரர்களாக திகழ்கிறார்கள். கால்பந்து விளையாட்டில் முக்கியமானதாக பார்க்கப்படுவது உலகக்கோப்பை தொடர். நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இந்த கால்பந்து உலகக்கோப்பை தொடர் நடைபெறுகிறது. கடந்த முறை 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற நிலையில், தற்போது கத்தாரில் நடைபெறவுள்ளது.

கத்தாரில் நடத்த எதிர்ப்பு ஏன்?

கத்தாரில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு இரண்டு விதங்களில் எதிர்ப்பு வருகிறது. ஒன்று தன்பாலின விவகாரத்தில் கத்தார் அரசு காட்டும் கடுமையான எதிர்ப்பு, மற்றொன்று மைதான கட்டமைப்பு பணிகளில் தொழிலாளர்கள் நிலை குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுகள்.

தன்பாலின விவகாரம்:

இஸ்லாமிய ஷரியா சட்டத்தின்படி தன் பாலினத்தவர்களின் பாலியல் உறவு ஒழுக்கக் கேடானது என்று கருதப்படுவதால் கத்தாரில் தன் பாலினத்தவர் உறவு சட்டவிரோதமாகும். அபராதம், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, மரண தண்டனை கூட விதிக்கப்படும் வகையில் இங்கே சட்டம் உள்ளது. கால்பந்தாட்ட தொடர் நடைபெறும் காலங்களில் உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த ரசிகர்கள் கத்தாரில் குவிவார்கள். அத்தகைய நேரங்களில் அவர்களது தன்பாலின மற்றும் காதல் கலாச்சாரங்கள் கத்தாரின் நடைமுறையோடு ஒத்துப்போகாத சூழல் உருவாக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. அதனால், கத்தார் நாடு கடைபிடித்து வரும் கட்டுப்பாடுகளுக்கு பல்வேறு நாடுகளின் கால்பந்தாட்ட அணிகள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன.

இருப்பினும், கால்பந்து போட்டிகளை பார்க்க ஒவ்வொருவரும் வரவேற்கப்படுகின்றனர். யாரும் பாகுபாடு காட்டப்படமாட்டார்கள் என கத்தார் உலக்கோப்பை ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகின்றனர். எனினும், ஓரினச்சேர்க்கை குறித்த சட்டங்களில் அரசு மாற்றம் செய்யாது. எனவே பார்வையாளர்கள் தங்களது கலாசாரத்தை மதிக்க வேண்டும் என்று கத்தார் தரப்பு பொறுப்பாளர் நசீர் அல் காதர் கேட்டுக்கொண்டதும் இங்கு முக்கியமாக பார்க்க வேண்டியுள்ளது.

தொழிலாளர்களின் அவல நிலை:

உலகக் கோப்பை இறுதி போட்டிகளுக்கான கட்டமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளில் 30,000-க்கும் அதிகமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட விதம் குறித்து சமீபத்தில் விமர்சனம் எழுந்தது. கட்டடப்பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் மோசமான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் காரணமாக பலர் காயம் அடைந்ததாகவும் அல்லது பலர் உயிரிழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

முன்னள் பிஃபா தலைவர் கருத்து:

2022 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் உரிமையை கத்தாருக்கு வழங்கியபோது, அப்போதைய (2010) உலக கால்பந்து நிர்வாகக் குழுவின் தலைவராக பிளாட்டர் இருந்தார். அவர் தற்போது கத்தாருக்கு போட்டியை நடத்தும் உரிமையை வழங்கிய தவறான முடிவு என்று கருத்து தெரிவித்துள்ளார்.

’இது ஒரு நாட்டைப் பொறுத்தவரை விளையாட்டு விட மிகச் சிறியது; ஆனால், கால்பந்து உலகக் கோப்பை கால்பந்து போட்டி எனக்கு அதைவிட மிகவும் பெரியது. கடந்த 2012 ஆம் ஆண்டு போட்டி நடத்தும் நாடுகளைத் தேர்ந்தெடுக்கப் பயன்படுத்திய அளவுகோல்களை பிஃபா சரிசெய்துவிட்டது' என்று பிளாட்டர் சுவிஸ் செய்தித்தாள் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறினார்.

நடந்தது என்ன?

17 ஆண்டுகள் பிஃபா தலைவராக இருந்த பிளாட்டர், 2015 ஆம் ஆண்டு பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, அவர் இரண்டு மில்லியன் சுவிஸ் பிராங்குகளை சட்டவிரோதமாக முன்னாள் UIFA தலைவர் மைக்கேல் பிளாட்டினிக்கு மாற்றியதாக பிஃபா குற்றம் சாட்டியது.

இதற்காக பிஃபாவால் எட்டு ஆண்டுகள் பிளாட்டர் தடை செய்யப்பட்ட நிலையில், பிளாட்டினி பணம் செலுத்தியதால் தடை ஆறு ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. ஆனால், மார்ச் 2021 ஆம் ஆண்டு பிஃபாவின் நெறிமுறைகளை மீறியதாக பிளாட்டருக்கு 2028 ஆம் ஆண்டு வரை கூடுதலாக தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பரில் பிளாட்டர் மற்றும் பிளாட்டினி மீது மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது, ஆனால், 2021 ஜூலை மாதம் சுவிட்சர்லாந்தில் நடந்த விசாரணையில் அவர்கள் இருவரும் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து 2018 மற்றும் 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை முறையே ரஷ்யா மற்றும் கத்தாரில் நடத்துவதற்கான முடிவு ஊழல் குற்றச்சாட்டுகளால் தடுக்கப்பட்டுள்ளது, கடந்த 2015 இல் சுவிஸ் வழக்கறிஞர்கள் மற்றும் அமெரிக்க நீதித்துறை இரண்டு விசாரணைகளைத் தொடங்கியது.

கத்தார் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் எப்போதுமே எந்தத் தவறும் செய்யவில்லை என்று மறுத்துள்ளன, இது 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பிஃபாவின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

எத்தனை அணிகள்? எப்படி நடைபெறும்?

அமெரிக்கா, மெக்ஸிகோ, கன்னடா, கேமரூன், மொரோக்கோ, துனிசியா, செனகள், கானா, உருகுவே, ஈக்வடார், அர்ஜென்டினா, பிரேசில், போர்ச்சுக்கல், போலந்து, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, இங்கிலாந்து, செர்பியா, ஸ்பெயின், குரோசியா, பெல்ஜியம், பிரான்ஸ், டென்மார்க், ஜெர்மனி, ஜப்பான், சவுதி அரேபியா, தென்கொரியா, ஈரான், கத்தார், வேல்ஸ், கோஸ்டா ரிகா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும்.

இதனையடுத்து 32 அணிகளும், 4 அணிகள் கொண்ட 8 குழுக்களாக பிரிக்கப்படும். அதன்படி

குழு ஏ : நெதர்லாந்து, செனகல், ஈக்வடார், கத்தார்

குழு பி : இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்

குழு சி : போலந்து, மெக்ஸிகோ, அர்ஜென்டினா, சவுதி அரேபியா

குழு டி : துனிசியா, டென்மார்க், ஆஸ்திரேலியா, பிரான்ஸ்

குழு இ : ஜப்பான், ஜெர்மனி, கோஸ்டா ரிகா, ஸ்பெயின்

குழு எஃப் : பெல்ஜியம், கனடா, மொரக்கோ, குரோயேஷியா

குழு ஜி : கேமரூன், சுவிட்சர்லாந்து, பிரேசில், செர்பியா

குழு எச் : கொரிய குடியரசு, உருகுவே, கானா, போர்ச்சுக்கல்.. ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

போட்டி நடைபெறும் தேதிகள்:

நவம்பர் 20 தொடங்கி டிசம்பர் 3 ஆம் தேதி வரை குரூப் சுற்றுகள் நடைபெறும். 12 நாட்கள் நடைபெறும் குரூப் சுற்றுப் போட்டிகளின் போது, 1 நாளைக்கு 4 போட்டிகள் நடைபெறும். குரூப் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடத்தை பிடிக்கும் 16 அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும். டிசம்பர் 3 முதல் 6 வரை காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகளும், டிசம்பர் 14 மற்றும் 15 இல் கால் இறுதிச் சுற்றுகளும் நடைபெறவுள்ளன. டிசம்பர் 18-ஆம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறும்.

இந்திய நேரப்படி எப்போது போட்டிகள்?

இந்திய நேரப்படி மாலை குரூப் போட்டிகள் மாலை 3:30 மற்றும் 6:30 மணிக்கும், காலிறுதிக்கு முந்தைய சுற்று இரவு 8:30 மற்றும் 10.30 மணிக்கும், அரை இறுதிப் போட்டிகள் இரவு 10:30 மணிக்கும், இறுதிப்போட்டி இரவு 8:30 மணிக்கு தொடங்கும்.