தற்போது 18 வயது நிரம்பிய Zhou Chuna என்ற சீன பெண் ஒருவர், சீன நடிகை எஸ்தர் யூவின் போல தன்னை மாற்றி கொள்ள வேண்டும் என்பதற்காக தனது பெற்றோரின் சம்மதத்துடன் பிளாஸ்டிக் சர்ஜரி மேற்கொண்டுள்ளார். ஆனால் அதுவே தற்போது வினையாகிவிட்டது.
காரணம் கிழக்கு சீனாவில், Zhejiang மாகாணத்தைச் சேர்ந்த Zhou Chuna தனது 13 வயதில் இருந்தே 10 கண்ணிமை அறுவைசிகிச்சை, பல எலும்பு ஷேவிங் சிகிச்சை செய்துள்ளாராம். 100க்கும் மேற்பட்ட மருத்துவ நடைமுறைகளை தற்போது வரையிலும் தொடர்ந்து வந்துள்ளார்.
இத்தனை சிகிச்சைகளை எடுத்துக்கொண்டதால் அவருக்கு பல பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாம். உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளார் இந்தச் சிறுமி. இதற்கான மருத்துவச் செலவு மட்டும் ரூ.4.6 கோடி என்று தெரிகிறது. அப்பாவித்தனமாக தொடங்கிய சிறுமியின் செயல் தற்போது பெரும் பாதிப்புகளை அவருக்கு ஏற்படுத்தியுள்ளது. இதனால் சில வாரங்கள் படுத்த படுக்கையாகவும் இருந்துள்ளார்.
வலி மிகுந்த தொடர் அறுவை சிகிச்சையை செய்து கொண்ட சிறுமிக்கு மருத்துவர்கள் தரப்பில் இருந்து அபாய எச்சரிக்கையும் கிடைத்துள்ளது. ஆனாலும் அவர் அவற்றை தொடர்ந்துள்ளார்.
பள்ளியில் தனது தோற்றத்தை பலரும் கேலி செய்ததால் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டதாகவும், அதனாலேயே அவர் இத்தனை முறை அறுவைசிகிச்சை செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அச்சிறுமி தெரிவிக்கையில், “என் பழைய நண்பர்களுக்கு நான் யார் என்றே அடையாளம் தெரியவில்லை. மேலும் என் பெற்றோர் நான்தான் அவர்களின் மகள் என்று கூறுவதற்கே தயங்குகிறார்கள்” என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.