உலகம்

102 ஐபோன்களை ஆடைக்குள் மறைத்து கடத்த முயன்ற பெண் கைது

webteam

சீனாவில் ஆடைக்குள் மறைத்து 102 ஐபோன்களைக் கடத்த முயன்ற இளம் பெண்ணை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். 

ஹாங்காங்கிலிருந்து சீனாவுக்கு ஐபோன்களை சட்டவிரோதமாகக் கடத்த முயன்ற அந்த பெண்ணை சென்சென் விமானநிலைய அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து விலை உயர்ந்த 7 கைக்கடிகாரங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக சீன அதிகாரிகள் தெரிவித்தனர். கோடைகாலத்தில் ஸ்வெட்டர் அணிந்து அந்த பெண் வந்ததால், சந்தேகமடைந்த அதிகாரிகள் சோதனையிட்டதில் ஐபோன்களைக் கடத்தி வந்ததைக் கண்டறிந்தனர். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த எடை 9 கிலோ இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கிலிருந்து சீனாவுக்கு ஐபோன்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவது இது முதல்முறையல்ல. கடந்த 2015ல் 84 ஐபோன்களைச் சீனாவுக்குக் கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.