உலகம்

பாக்.பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப்க்கு எதிராக முழக்கம் - இம்ரான் கான் மீது வழக்குப்பதிவு

பாக்.பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப்க்கு எதிராக முழக்கம் - இம்ரான் கான் மீது வழக்குப்பதிவு

Veeramani

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 150 பேர் மீது அந்நாட்டு காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றுள்ள ஷெபாஸ் ஷெரிஃப் முதல் வெளிநாட்டு பயணமாக சவுதி அரேபியா சென்றார். அங்குள்ள புகழ்பெற்ற மசூதிக்கு ஷெரிஃப் சென்ற போது அவரை சூழ்ந்துகொண்ட சிலர் திருடன் என்றும், சதிகாரன் என்றும் முழக்கம் எழுப்பினர். மேலும் மோசமான வார்த்தைகளை கொண்டு பாகிஸ்தான் பிரதமரையும் அவரது குழுவினரையும் அவர்கள் திட்டினர். இந்த வீடியோ சமூக தளங்களில் பரவியது.



இது தொடர்பாக 5 பேரை சவுதி அரேபிய காவல் துறை கைது செய்தது. இந்நிலையில் பிரதமருக்கு எதிராக கோஷமிடுவதற்காக 100 பேரை சவுதி அரேபியாவிற்கு அனுப்பியதாக கூறி முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது முன்னாள் அமைச்சரவை சகாக்கள் சிலர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இது தவிர இம்ரான் கான் ஆதரவாளர்கள் 150 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

சில வாரங்களுக்கு முன்பாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக 174 உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில் அவர் பிரதமர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரிப் தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷெபாஸ் ஷெரிப், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் இளைய சகோதரர் ஆவார்.

இதையும் படிக்க: பரிசாக கிடைத்த நகையை விற்றதாக இம்ரான் கான் மீது புகார் - விசாரணையை தொடங்கியது புதிய அரசு