உலகம்

இந்தியர்கள் குறித்து இனவெறி கருத்து - சிங்கப்பூர் நபருக்கு சிறை, 50 ஆயிரம் அபராதம்

rajakannan

இந்தியர்கள் குறித்து இனவெறி கருத்துகளை பேசியவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் நான்கு வாரம் சிறை தண்டனை விதித்துள்ளது. 

இந்தியாவைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளி ராமசந்திரன் உமாபதி, சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மூன்றாம் தேதி, சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் இரண்டாவது டெர்மினலில் உள்ள லிப்ட் ஒன்றில் சென்றுள்ளார். அந்த லிப்டில் சீன வம்சாவளி சிங்கப்பூர் குடிமகனான வில்லியம் சின் சாய் என்பவர் இருந்துள்ளார். 

உமாபதி லிப்ட் உள்ளே நுழைந்ததும், ‘அழுக்குபடிந்த நீங்கள் வெளியேறுங்கள், இந்தியர்களுடன் லிப்டில் பயணிப்பதை நான் விரும்பவில்லை, நீங்கள் நாற்றம் பிடித்தவர்கள்’ என அசிங்கமான வார்த்தைகளுடன் இனவெறி கருத்துகளை சின் சாய் கூறியுள்ளார். இந்தியர்கள் குறித்து இனவெறி கருத்துகளை பேசியதாக சின் சாய் மீது உமாபதி சிங்கப்பூர் போலீசில் புகார் அளித்தார். அதேபோல், இதுதொடர்பாக சிங்கப்பூர் காவல்துறையின் ஃபேஸ்புக் பக்கத்தை டேக்( Tag) செய்தும் ஒரு வீடியோ பதிவினை பதிவிட்டார். அந்த வீடியோ பின்னர் பலரால் கவனிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் இந்தியர்கள் குறித்து இனவெறி கருத்துகளை தெரிவித்த சன் சாய்க்கு நான்கு வாரம் சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் நீதிமன்றம் விதித்துள்ளது. இதுபோன்ற கருத்துகளை ஒருபோதும் ஏற்க முடியாது என நீதிபதிகள் கண்டிப்பாக கூறியுள்ளனர்.