iswaran x page
உலகம்

சிங்கப்பூர்: வரலாற்றில் முதல்முறை... கிஃப்ட் பெற்ற வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு 12 மாதங்கள் சிறை!

Prakash J

சிங்கப்பூர் அரசில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்தவர், ஈஸ்வரன். இவர், தொழிலதிபர்களிடம் இருந்து, 4,00,000 சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள பரிசுப் பொருட்களை பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஈஸ்வரன், அதன்பிறகு, ‘என் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்று நிரூபிப்பேன்’ என கூறி வந்தார்.

அவர் மீதான 35 குற்றச்சாட்டுகளில், ‘அரசாங்கச் சேவையின்போது விலை மதிப்புள்ள பொருள்களை அன்பளிப்பாகப் பெற்றுக் கொண்டார்’ என்று மட்டும் நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இத்துடன் விசாரணைக்கு இடையூறு விளைவித்தது தொடர்பாக மேலும் ஒரு குற்றச்சாட்டும் அவர்மீது சுமத்தப்பட்டது.

இதையும் படிக்க: பெண்கள் பற்றி தரக்குறைவாகப் பேசிய மகாராஷ்டிரா MLA.. எழுந்த எதிர்ப்பு.. அறிவுரை கூறிய துணை முதல்வர்!

சிங்கப்பூரை பொறுத்தவரை, குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 165ன்கீழ், பொதுச் சேவை ஊழியர் ஒருவர், அவரது அதிகாரபூர்வ நிலையில் எவரிடமிருந்தும் விலைமதிப்புள்ள எதையும் இலவசமாகவோ போதிய கட்டணமின்றியோ ஏற்றுக்கொள்வது குற்றமாகும்.

அதன்பேரில் ஈஸ்வரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையில், ஹோட்டல் தொழிலதிபரும் சிங்கப்பூரில் ‘எஃப்1’ கார்ப் பந்தயங்கள் நடைபெற முக்கியக் காரணமாக இருந்தவருமான பெரும்பணக்காரர் ஓங் பெங் செங், லம் சாங் ஹோல்டிங்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் டேவிட் லம் ஆகியோரிடமிருந்து டாலர் மதிப்பில் 4,00,000க்கும் மேல் மதிப்புள்ள அன்பளிப்புகளை தான் பெற்றுக்கொண்டதை ஈஸ்வர் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு 12 மாதம் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. கடந்த 50 ஆண்டு காலத்தில் சிங்கப்பூரில் அமைச்சர் ஒருவருக்கு எதிராக இத்தகைய வழக்குப்பதிவு செய்யப்படுவதும், தண்டிக்கப்படுவதும் இதுவே முதல்முறையாகும்.

முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட ஈஸ்வரன், இந்த ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி அனைத்து அதிகாரத்துவப் பதவிகளிலிருந்தும் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: வாரணாசி| கோயில்களில் இருந்து சாய் பாபா சிலைகளை அகற்றிய இந்துத்துவா அமைப்பினர்.. கிளம்பிய எதிர்ப்பு!