அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சீக்கியர் ஒருவர் மீது இனவெறி தாக்குதல் நடந்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கேயெஸ் சாலையின் அருகே 50 வயதுடைய சீக்கியர் ஒருவர், உள்ளூர் வேட்பாளர்களின் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வெள்ளைக்காரர்கள் இரண்டு பேர், அந்த சீக்கியரை தாக்கினர்.
’உன்னை யாரும் இங்கே வரவேற்கவில்லை. உன் நாட்டுக்கு திரும்பி போ’ என்று கூறியபடியே அவர்கள் மீண்டும் மீண்டும் தாக்கியுள்ளனர். பின்னர் சீக்கியரின் டிரெக்கில், ’உன் நாட்டுக்குத் திரும்பி போ’ என்று பெயின்டால் எழுதிவிட்டு சென்றனர். தாக்குதலில் சீக்கியர் பலத்த காயம் அடைந்தார். கடந்த வாரம் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
முகப்பதிவு ஒன்றில், ‘அந்த சீக்கியரை இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளனர். அத்தாக்குதலில் இருந்து அவரது டர்பன் அவரை காப்பாற்றி யுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 5 லட்சம் சீக்கியர்கள் வசிக்கின்றனர். இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பின் இஸ்லாமியர்கள் என நினைத்து சீக்கியர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வருவது அதிகரித்து வருகிறது. 2018ம் வருட தொடக்கத்தில் இருந்து, வாரம் ஒரு சீக்கியர் தாக்கப்படுவதாக அமெரிக் காவில் உள்ள சீக்கிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.