பதவியேற்பு விழாவுக்கு கபில்தேவ், சித்து உட்பட யாரையும் அழைக்கவில்லை என்று பாகிஸ்தானின் இம்ரான் கான் கட்சி அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் கடந்த மாதம் நடந்த தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி வெற்றி பெற்றது. இருந்தாலும் ஆட்சியமைக்க போதுமான இடங்களை அந்தக் கட்சியால் பெற முடியவில்லை. மற்ற கட்சிகளுடன் இணைந்து இம்ரான் கான் ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளார்.
பாகிஸ்தானின் சுதந்திர தினமான, வரும் 11 ஆம் தேதி பதவியேற்பு விழா நடக்கிறது. பதவியேற்பு விழாவில் பங்கேற்க, இந்திய கிரிக்கெட் பிரபலங்களும் இம்ரான் கானின் கிரிக்கெட் நண்பர்களுமான சுனில் கவாஸ்கர், கபில் தேவ், சித்து மற்றும் இந்தி நடிகர் ஆமிர்கான் ஆகியோருக்கு இம்ரான் கான் கட்சி அழைப்பு விடுத்தது என்றும் விழாவில் இந்தியப் பிரதமர் மோடி உள்ளிட்ட சார்க் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க வேண்டும் என்று அக்கட்சி விரும்புவதாகவும் கூறப்பட்டது. அரசியல் பிரமுகரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சித்துவும், அந்த அழைப்பை ஏற்பதாக தெரிவித்திருந்தார்.
இந் நிலையில், இம்ரான் கான் கட்சியின் செய்தி தொடர்பாளர் இதை மறுத்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள் என யாருக்கும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெறும் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.