அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் கோவிஷீல்டு என்ற கொரோனா தடுப்பூசியால் கடுமையான பாதிப்புகளும், பக்கவிளைவுகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக கடந்த காலங்களில் இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் 51 வழக்குகள் தொடரப்பட்டன.
இவ்வழக்குகளின் விசாரணையின்போது, கோவிஷீல்டை தயாரித்த அஸ்ட்ராஜெனெகா நிறுவனம், “எங்கள் நிறுவன கொரோனா தடுப்பூசி மிக மிக அரிதாக சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும்” என இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டிருந்தது. இது உலகம் முழுக்க மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்து விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் பேசுகையில்,
”கோவிஷீல்டு தடுப்பூசி யின் தொடர்ச்சியாக இரத்த உறைதல் நிகழ்வுகள் மற்றும் ரத்த தட்டணுக்களை குறைத்தல் போன்ற பக்க விளைவுகள் நிகழ்வதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இயற்கை நிகழ்வான பிள்ளை பெறுதல் எனும் நிகழ்வில் உலகம் முழுவதும் பத்து லட்சம் கர்ப்பிணி பெண்களில் 67 பேர் பிள்ளை பேறு சிக்கலில் மரணம் அடைகின்றனர். ஆனால் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் ஆஸ்ட்ரா செனிகா நிறுவனமும் இணைந்து கோவிஷீல்டு தடுப்பூசி எடுத்துக்கொண்ட பத்து லட்சம் பேரில் ஒருவருக்கு இரத்த உறைதல் நிகழ்வுகள் மற்றும் ரத்த தட்டணுக்களை குறைத்தல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுவதாக பிரிட்டிஷ் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எல்லா செயலுக்கும் பக்கவிளைவு இருக்கும். மருந்து என்று வரும்போது மருந்து செலுத்துவதால் விளையும் நன்மை அதனால் ஏற்படும் பக்க விளைவு இரண்டையும் கணக்கில் கொண்டு தான் பயனுக்கு அனுமதி தரவேண்டுமா இல்லையா என முடிவுக்கு வரவேண்டும். அதன் அடிப்படையில் தான் அரிதினும் அரிதாக பக்க விளைவு கொண்ட கோவிட் தடுப்பூசிகளுக்கு உலகம் முழுவதும் அனுமதி வழங்கப்பட்டது.
பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் ஆஸ்ட்ரா செனிகா நிறுவனமும் இணைந்து உருவாக்கிய கோவிஷீல்டு வெக்ட்டார் தொழில்நுட்ப தடுப்பூசி ஆகும். ஆனால் பாரத் பயோடெக் நிறுவனமும் ஐசிஎம்ஆரும் இணைந்து உருவாக்கிய கோவேக்சின் வைரஸை செயலிழக்கச் செய்து தயாரிக்கப்பட்ட தடுப்பூசி.
கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்தால் நோயாளிகள் பலருக்கும் இரத்த உறைதல் நிகழ்வுகள் மற்றும் ரத்த தட்டணுக்களை குறைத்தல் போன்ற ஆபத்தான விளைவுகள் ஏற்படும். ”
வைக்கோல் கன்று போல செய்து பாசாங்கு காட்டி கறவை மாட்டில் பால் கறப்பது போல தான் தடுப்பூசி செயல்படும். வைரசின் வாசத்தை நமது நோய் தடுப்பு மண்டலத்துக்கு காட்டும். மோப்பம் பிடித்த நாய் கள்வனை பிடிப்பது போல நமது நோய் தடுப்பு மண்டலம் கொரோனா வைரசை இனம் காண பயிற்சி பெற்றுவிடும். தொற்று ஏற்பட்டால் நோய் தீவிரம் அடையும் முன்னர் பயிற்சி பெற்ற நோய் தடுப்பு மண்டலம் விரைவில் செயல்பட துவங்கி கொரோனா வைரசை அழித்து விடும்.
சில சமயம் வேலியே பயிரை மேய்வது போல தடுப்பூசி சிலரிடம் பக்க விளைவுகளை தூண்டி விடலாம். தடுப்பூசியை வைரஸ் என கருதி வெகு தீவிரமாக நோய் தடுப்பு மண்டலம் செயல்பட்டு ரத்த உறைதல் போன்ற விரும்பத்தக்க பக்க விளைவுகள் வெகு சிலரிடம் ஏற்படும். எனவே தான் தடுப்பூசியின் பலன் என்ன ஆபத்து என்ன என்பதை சோதனையோட்டத்தில் அறிந்து கொண்டு அதன் பின்னர் தான் பரவலாக தடுப்பூசியை செலுத்துவார்கள்.
கொரோனா தொற்றால் ஏற்படும் மரணங்கள் ஒவ்வொரு பத்துலட்சம் பேருக்கு பதினாலாயிரம் எனவும் கொரோனா தொற்றினால் ரத்த உறைதல் தன்மை ஏற்படுவதற்கு ஒவ்வொரு பத்து லட்சம் பேருக்கு ஒரு லட்சத்து அறுபதினாயிரம் எனவும் இருந்தது. இதை ஒப்பிடும் போது இந்த தடுப்பூசியினால் ஏற்படும் அரிதினும் அரிதான பக்கவிளைவு பத்து லட்சத்துக்கு ஒன்று எனவே தடுப்பூசியினால் ஏற்படும் அபாயத்தை விட பலன் பெரிது என்ற முடிவுக்கு வந்தார்கள்.
தடுப்பூசிகள் பயனுக்கு வந்த பின்னும் தொடர்ந்து கண்காணிக்கப்படும். அவ்வாறுதடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகளை கண்காணித்தனர்.
இப்படிப்பட்ட தடுப்பூசி பரிசோதனையில் நானும் பங்கேற்றவன் என்பதை இங்கே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பரிசோதனை நிலையில் தடுப்பூசி செலுத்திய பின்னர் என் உடல் நிலையையும் பல மாதங்கள் கண்காணித்தனர்.
ஐரோப்பிய யூனியன் நாடுகளில் 2.5 கோடி பேருக்கும் பிரிட்டனில் 1.8 கோடி பேர்கும் இந்த தடுப்பூசி அளிக்கப்பட்டது. அதாவது மொத்தம் 4.3 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்ட பின் அதில் 116 பேருக்கு தீவிர பக்கவிளைவு நிகழ்வுகள் ஏற்பட்டது வெளிப்பட்டது. மேலும் கூறக ஆய்வு செய்த பின்னர் பத்து லட்சம் பேர் இந்த தடுப்பூசியை எடுத்துக் கொண்டால் அதில் ஒருவருக்கு அரிதினும் அரிதாக பக்க விளைவுகள் ஏற்படும் என தெரியவந்துள்ளது. அதுவும் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நாற்பது எட்டு மணிநேரத்தில் தான் இந்த பக்க விளைவு ஏற்பட்டால் அது நிகழும். அதிக பட்சம் நான்கு முதல் இருபத்தி எட்டு நாட்களுக்குள் இத்தகைய பக்க விளைவுகள் ஏற்படலாம்; அவ்வளவே. எனவே பல மாதங்கள் முன்னர் எடுத்துக்கொண்டவர்களுக்கு இன்று எந்த பாதிப்பும் இல்லை.”
என்று கூறியுள்ளார்.
தற்போது ஏன் இந்த கோவிஷீல்டு பக்கவிளைவுகள் குறித்த பீதி செய்தி தலைதூக்கி உள்ளன?
”தடுப்பூசி செலுத்தியதில் ரத்த உறைவு ஏற்பட்டு வதை பட்ட ஒருவர் பிரிட்டிஷ் நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க அதில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையை தான் தவறாக பலரும் விளக்கம் அளிக்கின்றனர். இந்த அறிக்கை ஏற்கனவே பொது வெளியில் மருத்துவ ஆய்விதழ்களில் வெளியான செய்தி தான். எனவே தான் இந்தியாவில் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி அளித்த பின்னர் சில மணிநேரம் தங்கி செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
தப்பி தவறி பக்க விளைவு ஏற்பட்டால் அதனை முறிக்கும் மருந்தும் உள்ளது. எனவே தான் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி எடுத்த பிறகு சுமார் அரை மணிநேரம் முதல் ஒரு மணி நேரம் வரை தங்கி அதன் பின்னர் செல்ல அறிவுரையும் செய்தார்கள். அப்படியே ஒரு சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டாலும் உடனே முறிவு மருந்தை கொடுத்து சரி செய்து விடலாம்.
பத்து லட்சம் பேரில் ஒருவருக்கு என்ற அளவில் ஏற்படும் அரிதினும் அரிதான பக்கவிளைவை ஏதோ தடுப்பூசி பெற்ற அனைவருக்கும் ஏற்படுவது போல மீடியா நண்பர்கள் செய்தி பரப்புவது நன்மையன்று.
கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை மற்றும் மூன்றாம் அலையில் பல உயிர்களைக் காத்தவை - கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள்.
கோவிஷீல்டு கோவேக்சின் தடுப்பூசிகள் பெற்றுக்கொண்ட நேயர்கள் வீண்அச்சம் அடைய வேண்டாம். இவ்வளவு மாதங்கள் கடந்த பின்னர் பின்விளைவுகள் ஏதும் இராது.” என்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன்.