இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. ராணுவத்திற்கு எதிராகக் கிளர்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் அந்நாட்டில் பணவீக்கம் உச்சத்தில் உள்ளது. இந்த நிலையில், அந்நாட்டைச் சேர்ந்தவர் Pyae Phyo Zaw. இவர் சொந்தமாக 3 செல்போன் கடைகளை வைத்துள்ளார். இவர், தன் கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகமாய் வழங்கியுள்ளார்.
இந்த விவகாரம் அந்நாட்டு ராணுவ ஆட்சிக்குத் தெரிய வந்து, அவரைக் கைது செய்திருப்பதுடன், Pyae Phyo Zawவின் 3 செல்போன் கடைகளையும் இழுத்து மூடியுள்ளது. அந்நாட்டின் சட்டத்திட்டத்தின்படி, ஊதிய உயர்வு கொடுப்பது ஒன்றும் தவறில்லை. ஆனால், பணவீக்கம் அதிகரித்துவரும் நிலையில், ஒரு சிலருக்கு மட்டும் ஊதிய உயர்வு கொடுப்பது சமூகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தும் என்று ராணுவம் நம்புகிறது.
இது ஆட்சியை நடத்தும் தங்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிடும் என்பதாலேயே இதற்கு எதிராக கைது நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
தவிர, மூடப்பட்டிருக்கும் கடைகள் முன்பு ’சமூகத்தின் அமைதி மற்றும் ஒழுங்கைச் சீர்குலைத்ததற்காக இக்கடை மூடப்படுகிறது’ என்கிற வாசகம் அடங்கிய போர்டையும் வைத்துள்ளது. இவரைத் தவிர, இதேபோல சமீப நாட்களில் ஊதிய உயர்வு கொடுத்ததாக மேலும் பலர் அந்நாட்டில் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அக்கடையின் ஊழியர்கள், "சம்பள உயர்வுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருந்தோம், ஆனால் இப்போது கடை மூடப்பட்டுவிட்டது. எங்களுக்கு வந்துகொண்டிருந்த குறைந்தபட்ச சம்பளம்கூட இப்போது கிடைக்கவில்லை. நாங்கள் விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறோம்" என தெரிவித்துள்ளனர்.