ஷேக் ஹசீனா புதிய தலைமுறை
உலகம்

நாட்டை விட்டு வெளியேறினார் ஷேக் ஹசீனா... டெல்லிக்கு வருகிறாரா?

Angeshwar G

வங்கதேச கலவரம்

அண்டை நாடான வங்கதேசத்தில், சுதந்திர போரில் பங்கெடுத்த வீரர்களின் வம்சாவளிகளுக்கு அரசு வேலைகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் சங்கத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால், போராட்டம் கைவிடப்பட்டது. எனினும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தீவிரவாதிகள் என பிரதமர் ஷேக் ஹசீனா கூறியதற்கு, கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து ஷேக் ஹசீனாவை பதவி விலக வலியுறுத்தி மீண்டும் போராட்டம் வெடித்தது.

வங்கதேசம்

இந்நிலையில், இந்த போராட்டங்களில் ஈடுபட்டு வன்முறைகளில் சிக்கி 14 காவலர்கள் உட்பட 98 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும், 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, வன்முறைகளை கட்டுக்குள் கொண்டுவர, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்நாட்டில் அனைத்து இணைய சேவைகள் முடங்கியுள்ளன.

தப்பியோடிய ஷேக் ஹசீனா

இந்நிலையில்தான், டாக்கா அரண்மைனையில் இருந்து ஷேக் ஹஸீனா வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது சகோதரியான ஷேக் ரெஹனாவுடன், ஷேக் ஹஸீனா பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான கணபாபனை விட்டு, ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிட்டதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

JUSTIN | நாட்டை விட்டு வெளியேறினார் ஷேக் ஹஸீனா: ராணுவ தளபதி

அதேசமயத்தில், அவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்துவிட்டதாகவும், ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை முறியடிக்குமாறு ராணுவத்துக்கு ஷேக் ஹஸீனாவின் மகன் வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வன்முறையை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால்தான், தனது பதவியைவிட்டு விலகி, உயிருக்கு ஆபத்து வரலாம் என்கிற காரணத்தால் அவர் நாட்டைவிட்டு தப்பியோட முயற்சித்தார் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவரது ஹெலிக்காப்டர் வங்காளம் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தின் வழியாக டெல்லிக்கு செல்வதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.

உறுதிப்படுத்திய தளபதி

இதை உறுதிப்படுத்தும் விதமாக வங்கதேச ராணுவத் தளபதி வாக்கர் உஸ் ஜாமான் நாட்டு மக்களிடையே உரையாற்றி பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ததை உறுதி செய்தார்.

அவர் மேலும் கூறியதாவது, கூறுகையில், “அரசியல் மாற்றம் நடந்து வருகிறது. இடைக்கால அரசாங்கம் நிறுவப்படும். அனைத்து கொலை வழக்குகளும் விசாரிக்கப்படும். தேசத்தின் முன்னேற்றத்தைக் காப்பதற்கு மோதலுக்கு பதிலாக ஒத்துழைப்பே முக்கியமானது. குடிமக்கள் அமைதியைப் பேணவேண்டும். வன்முறையைத் தவிர்த்துவிட்டு நாட்டின் நல்வாழ்வைத் தக்கவைக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.