ஷெபாஸ் ஷெரீப் ட்விட்டர்
உலகம்

பாகிஸ்தான்: 2வது முறையாக பிரதமர் ஆனார் ஷெபாஸ் ஷெரீப்!

பாகிஸ்தானில் நவாஷ் ஷெரீப்பின் சகோதரரான ஷெபாஸ் ஷெரீப், இன்று (மார்ச் 4) மீண்டும் 2வது முறையாக பிரதமராகப் பதவியேற்றார்.

Prakash J

அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பல்வேறு கட்சிகள் களம் இறங்கி இருந்தாலும் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர்களின் கட்சிகளான இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ், பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

இதில், இம்ரான் கான் ஆதரவுபெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் 93 இடங்களிலும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 75 இடங்களில் வெற்றிபெற்று 2வது இடத்தையும், 54 இடங்களில் வெற்றிபெற்ற பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 3வது இடத்தையும் பிடித்தன. இதுதவிர, முட்டாஹிதா குவாமி இயக்கம் பாகிஸ்தான் 17 இடங்களையும், வேறு சில சிறிய கட்சிகள் 17 தொகுதிகளையும் கைப்பற்றி உள்ளன.

எனினும், பாகிஸ்தானில் ஆட்சி அமைப்பதற்கு 133 இடங்கள் தேவை என்கிற நிலையில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த நிலையில், 3 முறை பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியும், பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து, தீவிர பேச்சுவார்த்தைக்குப் பின் கூட்டணி அரசை அமைக்க ஒப்புக்கொண்டன. அந்த வகையில், முன்னாள் பிரதமரான ஷெபாஸ் ஷெரீப் புதிய பிரதமராகவும், முன்னாள் அதிபரான ஆசிப் அலி சர்தாரி நாட்டின் புதிய அதிபராகவும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், பாகிஸ்தானின் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப், இன்று 2வது முறையாக பதவியேற்றுக்கொண்டார். அவரை எதிர்த்து இம்ரான்கான் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் உமர் அயூப் கான் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் உமர் அயூப் கான் 92 வாக்குகள் மட்டுமே பெற்ற நிலையில், ஷெபாஸ் ஷெரீப் 201 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இதையடுத்து பாகிஸ்தானின் புதியபிரதமராக அவர் தேந்தெடுக்கப்பட்டு, இன்று பதவியேற்றுக் கொண்டார். கடந்த 2022 ஏப்ரல் முதல் 2023 ஆகஸ்ட் வரை கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன், அவர் பிரதமராக பொறுப்பு வகித்தார். அதன்பிறகு தேர்தலை முன்னிட்டு அவரது ஆட்சி கலைக்கப்பட்டு காபந்து அரசு பாகிஸ்தானை ஆட்சி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமராய் இன்று ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றாலும், அவருடைய சகோதரரும் பிரதமர் வேட்பாளருக்கு அவரை முன்மொழிந்தவருமான பிஎம்எல்என் கட்சியின் தலைவரான நவாஸ் ஷெரீப்பே, அரசு தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுப்பார் எனக் கூறப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் பாகிஸ்தானில் சமூக வலைதளங்களை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக பஹ்ராமந்த் கான் டாங்கி என்ற உறுப்பினர், செனட் சபையில் தீர்மானம் தாக்கல் செய்துள்ளார். இளம் தலைமுறையினரின் எதிர்காலத்திற்கு கேடு விளைவிப்பதால், அனைத்து சமூக ஊடக தளங்களையும் முழுமையாக தடை செய்ய வேண்டும் என அந்தத் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் வந்த தீர்மானம் மீது செனட் சபையில் விவாதம் நடத்தப்பட உள்ளது.

பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி முதல் எக்ஸ் தளம் பெரும்பாலும் செயல்படாமலேயே உள்ளது. குறிப்பாக தேர்தலில் மோசடி நடந்ததாக முன்னாள் கமிஷனர் ராவல்பிண்டி லியாகத் அலி சட்டா, ஊடகங்களுக்கு பேட்டி அளித்தபிறகு எக்ஸ் தளம் செயல்படாமல் உள்ளது. இந்த நிலையில், ஒட்டுமொத்தமாக சமூக ஊடக தளங்களுக்கு தடை கோரி செனட் சபையில் தீர்மானம் கொண்டு வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கெனவே நாடு நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், இதுபோன்ற நடவடிக்கை பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைத் துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.

’அனைத்து சமூக ஊடகங்களுக்கும் தடை விதிக்கக்கோரி முன்மொழியப்பட்ட தீர்மானத்தை பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையம் (HRCP) கடுமையாக எதிர்க்கிறது’ என அதன் தலைவர் ஆசாத் இக்பால் தெரிவித்துள்ளார்.