உலகம்

15 வயதில் ஐ.எஸ் அமைப்புக்குச் சென்ற சிறுமி..! - குடியுரிமை ரத்தாகுமா?

webteam

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைவதற்காக 15 ஆவது வயதில் சிரியா சென்ற பிரிட்டன் சிறுமியின் குடியுரிமையை அந்நாட்டு அரசு பறிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிழக்கு லண்டனைச் சேர்ந்த ஷமிமா பேகம், 2015ஆம்‌ ஆண்டு தனது 15 ஆவது வயதில் பிரிட்டனை விட்டு வெளியேறினார். சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் பேகம் சேர்ந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும், பிரிட்டன் அரசும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கடைசி பிடியாக இருக்கும் பகோஸ் பகுதியில் அரசுப் படைகள் இறுதிக் கட்ட சண்டையை தீவிரப்படுத்தியதை அடுத்து, அங்கு வசித்து வந்த பொதுமக்கள்‌ அனைவரும் வெளியேற்றப்‌பட்டு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

அந்த முகாமில் ஒரு வார கைக்குழந்தையுடன் பேகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர், பிரிட்டனுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார். இந்தச் சூழலில் அவரது பிரிட்டன் குடியுரிமையை ரத்து செய்ய, உள்துறை அமைச்சகம் முடிவு செய்திருப்பதாக கூற‌ப்படுகிறது. பேகமின் தாயார் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பதால், குடியுரிமை ரத்து செய்யப்பட்டாலும், நாடு இல்லாத அகதியாக பேகம் மாறமாட்டார் என பிரிட்டன் வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். அதே சமயம், பிரிட்டன் உள்துறை அமைச்சகத்தின் இந்த முடிவு மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருப்பதாக பேகம் குடும்பத்தின் வழக்கறிஞர் தஸ்னிமே தெரிவித்துள்ளார்.