உலகம்

ரசிகைகளுக்கு தொடர்ந்து பாலியல் கொடுமை.. கிராமி விருது வென்ற பாப் பாடகருக்கு 30 ஆண்டு சிறை!

ரசிகைகளுக்கு தொடர்ந்து பாலியல் கொடுமை.. கிராமி விருது வென்ற பாப் பாடகருக்கு 30 ஆண்டு சிறை!

ச. முத்துகிருஷ்ணன்

ரசிகைகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அமெரிக்க பாப் பாடகர் ஆர். கெல்லிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாகவே ஆர். கெல்லி பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வந்தார். குறிப்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு மூன்று ரசிகைகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் 7 கோடி ரூபாய் செலுத்தி ஜாமீனில் வெளிவந்தார். இந்நிலையில், ரசிகைகளை பல முறை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஆர்.கெல்லிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கெல்லியின் வழக்கறிஞர்கள் அதிகபட்சம் சுமார் 17 ஆண்டுகள் வரை இலகுவான தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். வழக்கறிஞர் ஜெனிபர் போன்ஜீன் நீதிபதியிடம், “கெல்லி ஒரு குழப்பமான வளர்ப்பு சூழலுக்கு ஆளானார். குழந்தையாக இருந்தபோது அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். அவர் ஒன்றும் அந்த அளவிற்கு கொடுமையானவர் அல்ல” என்று கூறினார். ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதி ஆன் டோனெல்லி “இது போன்ற மோசமான நடத்தைகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.

30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியே நிருபர்களிடம் தான் மேல்முறையீடு செய்வேன் என்று கூறினார் கெல்லியின் வழக்கறிஞர் போன்ஜீன். பல ஆண்டுகளாக பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கெல்லி தண்டனை பெற்றது இதுவே முதல் முறை. கெல்லி, மூன்று முறை கிராமி விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.