உலகம்

இலங்கையில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு - போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்

இலங்கையில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு - போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்

Veeramani

இலங்கையில் தற்போது நிலவும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடுக்கு தீர்வுகாண வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கையில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால், கடந்த சில தினங்களாக அந்த நாட்டிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தை சூழ மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். பல நகர் பகுதிகளிலும் எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தால் பலரின் வாகனங்கள் வீடுகளிலும், வீதிகளிலும் டீசல் இல்லாமல் நிற்கின்றன. வாகன ஓட்டுநர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டீசலை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது, இதனால் போலீசார் இப்பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில் ஒரு சிலர் எரிபொருள் நிலையங்களில் வரிசையில் நின்று, டீசலை வாங்கிச்சென்று அதனை அதிக விலைக்கு விற்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுத்தரக் கோரி நுவரெலியா தலவாக்கலையில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு, உரம் இல்லாததால் தேயிலை சாகுபடி பாதிப்பு, தொடர் மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிரான கோசங்களை எழுப்பி, பதாதைகளை ஏந்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.