உலகம்

7-வது மாடியில் இருந்து குதித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை - ஸ்விசில் மர்மம்

7-வது மாடியில் இருந்து குதித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை - ஸ்விசில் மர்மம்

ஜா. ஜாக்சன் சிங்

ஸ்விட்சர்லாந்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது மாடியில் இருந்து குதித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்விட்சர்லாந்தின் மான்ட்ரிக்ஸ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 7-வது தளத்தில் பிரான்ஸை சேர்ந்த ஒரு குடும்பம் வசித்து வந்தது. கணவன், மனைவி, மனைவியின் சகோதரி மற்றும் தம்பதியின் இரண்டு குழந்தைகள் என 5 பேர் அந்தக் குடும்பத்தில் இருந்தனர். அக்கம்பக்கத்தினர் யாருடனும் அவர்கள் இதுவரை பேசியதில்லை எனக் கூறப்படுகிறது.

இதனிடையே, தனது குழந்தைகளை அந்த தம்பதியினர் வீட்டில் வைத்தே படிக்க வைத்து வந்தனர். ஸ்விட்சர்லாந்தில் வீட்டில் வைத்து குழந்தைகளை படிக்க வைப்பது சட்டப்படி குற்றம் ஆகும். இந்நிலையில், இதுகுறித்து அந்த குடியிருப்பில் உள்ளவர்கள் போலீஸில் புகார் அளித்தனர். இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு போலீஸார் பல முறை சம்மன் அனுப்பியும் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை எனத் தெரிகிறது.

இதையடுத்து, நேற்று இரவு போலீஸாரே அந்தக் குடியிருப்புக்கு நேரில் சென்று, சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் வீட்டுக்கு சென்றுள்ளனர். கதவு தாழிடப்பட்டிருந்ததால் போலீஸ் அதிகாரிகள் கதவை தட்டியுள்ளனர். அப்போது உள்ளே இருந்து 'யார் வந்திருப்பது' என ஒரு பெண் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள், 'போலீஸ்' என பதிலளித்துள்ளனர். அதன் பிறகு, வீட்டுக்குள் இருந்து எந்த சத்தமும் வரவில்லை. சில நிமிடங்களில் அடுக்குமாடி குடியிருப்பின் கீழே பெரும் சத்தம் கேட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த ஜன்னல் வழியாக போலீஸார் பார்த்த போது, அந்தக் குடும்பத்தினர் அனைவரும் கீழே ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

உடனே அவர்களை மீட்டு மருத்துவமனையில் போலீஸார் சேர்த்தனர். எனினும், சிகிச்சை பலனில்லாமல் அவர்களில் 4 பேர் உயிரிழந்தனர். 8 வயது மகன் மட்டும் படுகாயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

ஒரு சாதாரண வழக்கில் விளக்கம் கேட்டு போலீஸார் வந்ததற்காக ஒரு குடும்பத்தினர் அனைவரும் தற்கொலை முடிவை எடுப்பார்களா என காவல்துறை அதிகாரிகள் குழம்பி வருகின்றனர். இல்லையெனில், இதில் வேறு ஏதேனும் மர்மம் இருக்குமா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.