செப்டம்பர் 11. அமெரிக்கா வரலாற்றில் மறக்க முடியாத நாள். 9/11 என்று குறிப்பிட்டாலே அச்சம், அழுகை, ஆத்திரம் என அமெரிக்கர்கள் மத்தியில் பல உணர்வுகள் எழுவதை காண முடியும்.
2001, செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்கா நேரப்படி காலை 8.46 மணிக்கு நியூயார்க் நகரின் அடையாளமான உலகவர்த்தக மைய கட்டடத்தின் வடக்கு கோபுரம் மீது விமானம் ஒன்று மோதியது. என்ன நடக்கிறது என தெரியாமல் அமெரிக்கர்கள் நிலைகுலைந்து போயினர். மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டன. அடுத்த 17 நிமிடங்களில் மற்றொரு விமானம் உலக வர்த்தக மைய கட்டடத்தின் தெற்கு கோபுரத்தில் மோதியது. கட்டடம் தீப்பற்றி எரிந்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்குள் அமெரிக்கா ராணுவ தலைமையகமான பெண்டகன் மீது ஒரு விமானம் மோதியது. பென்சில்வேனியா பகுதியில் வெட்டவெளியில் விமானம் ஒன்று மோதி கீழே விழுந்தது.
அமெரிக்கா மட்டுமல்ல உலகமே இந்தக் காட்சிகளை கண்டு உறைந்து போனது. இந்த தாக்குதல்களில் சுமார் 3 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். உலக வல்லரசின் கருப்பு தினமாக இது அமைந்தது. ஒசாமா பின்லேடன் தலைமையிலான அல்கய்தா பயங்கரவாதிகள் திட்டமிட்டு, இந்த தாக்குதலை அரங்கேற்றியது பின்னர் தெரிய வந்தது. 19 பயங்கரவாதிகள் குழுக்களாக பிரிந்து, விமான நிலைய பாதுகாப்பு வளையங்களை மீறி விமானங்களுக்குள் நுழைந்து நடுவானில் அவற்றை கடத்தி இந்த தாக்குதலை நேர்த்தியாக திட்டமிட்டு அரங்கேற்றியது கண்டறியப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் வேட்டையாடப்படுவார்கள் என சூளுரைத்த அமெரிக்கா அரசு , பயங்கரவாதத்தை ஒழிப்போம் என்ற முழக்கத்துடன் களமிறங்கியது. ஆப்கானிஸ்தான் மண்ணில் அமெரிக்கா படைகள் கால்பதிக்க இது முக்கிய காரணம். அது மட்டுமல்ல 2001 முதல் 2021 வரை இந்த 20 ஆண்டுகால சர்வதேச அரசியலை தீர்மானித்ததும் இந்த தாக்குதல் தான். தலிபான்களிடம் ஒசாமா பின்லேடன் தஞ்சம் புகுந்திருந்த நிலையில் அவரை ஒப்படைக்க தலிபான்கள் மறுத்ததால் ஆப்கானில் தலிபான்களை ஒழித்து கட்டியது அமெரிக்கா. 10 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடன் பதுங்கி இருப்பது கண்டறியப்பட்டு அமெரிக்கா படைகளால் கொல்லப்பட்டார்.
இந்த தாக்குதல் நிகழ்ந்து 20 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. ஆனால் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் நோக்கம் மட்டும் நிறைவு பெறவில்லை. ஏனெனில் ஆப்கானிஸ்தானை மீண்டும் தலிபான்களிடமே ஒப்படைத்துள்ளது அமெரிக்கா. உலக அரசியலும் 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைக்கே திரும்பியுள்ளது.