உலகம்

”சும்மா சும்மா திட்டிட்டே இருந்தாரு..” : முதலாளியின் நெஞ்சில் கத்தியால் குத்திய காவலாளி!

”சும்மா சும்மா திட்டிட்டே இருந்தாரு..” : முதலாளியின் நெஞ்சில் கத்தியால் குத்திய காவலாளி!

JananiGovindhan

ஊழியர்களிடம் கடுமையான சொற்களில் முதலாளிகள் பேசுவது, திட்டுவதெல்லாம் தொழில் ரீதியான அவர்களது தரத்தை குறைப்பதாகவே கருதப்படுகிறது. சமயங்களில் இதுப்போன்ற செயல்களால் முதலாளிகளே பாதிக்கப்படக்கூடும்.

அந்த வகையிலான சம்பவம் ஒன்று தாய்லாந்தில் நடந்திருக்கிறது. அதன்படி நிறுவனம் ஒன்றின் காவலாளியை நித்தமும் திட்டித் தீர்த்து வந்ததால் அந்த காவலாளி கையாலேயே முதலாளிக்கு கத்திக்குத்து ஏற்பட்டிருக்கிறது.

சாவத் ஸ்ரீராட்சலாவ் என்ற 44 வயதுடைய காவலாளி அரோம் பனன் என்ற 56 வயதுடையவரின் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சாவத்திடம் அரோம் எப்போதும் கண்டிப்புடனும் கடுமையாகவும் நடந்து வந்திருக்கிறார். பல மணிநேரம் வேலையும் பார்க்க வைத்திருக்கிறார். அவ்வப்போது வசைப்பாடுவதையும் அரோம் வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இவையெல்லாம் சாவத்தின் மனதில் ஆழமாக பதிந்துப்போக ஒரு கட்டத்தில் தனது முதலாளி ஆரோமின் நெஞ்சிலேயே கத்தியால் குத்தியிருக்கிறார். சம்பவம் அறிந்துச் சென்ற தாய்லாந்து போலீசார் சாவத்தை கைது செய்திருக்கிறார்.

கைதுக்கு பிறகான விசாரணையின் போது, “ரொம்ப நாளாகவே என் பாஸ் மீது கடும் கோபத்தில் இருந்து வந்தேன். வீட்டுக்கு சென்றால் கூட ஆரோம் என்னை எப்போதும் திட்டுவதும், என்னிடம் கடுமையாக நடந்துக்கொண்டதுமே என் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். இதனால் என்னால் தூங்க முடியாமல் போனது. அவர் என்னை கொடுமைப்படுத்தியதால் பல நாட்களாக மன அழுத்தத்தில் இருந்தேன்.” என சாவத் ஸ்ரீராட்சலாவ் கூறியிருக்கிறார்.

இந்த சம்பவம் நேற்று (பிப்.,1) பாங்காக்கின் லம்பினி பூங்காவில் நடந்திருக்கிறது. குறித்த சிசிடிவி காட்சிகளையும் போலீசார் கைப்பற்றியிருக்கிறார்கள். அதில், சாவத்திடம் ஆரோம் தன்னை விட்டுவிடும் படி கெஞ்சிய போதும் அவர் மீதான ஆத்திரத்தில் கருணையே இல்லாமல் ஆரோமின் நெஞ்சில் கத்தியால் குத்திவிட்டு சாவத் சைக்கிளில் சென்றது பதிவாகியிருக்கிறது.

நெஞ்சின் இடப்பக்கத்தில் கத்திக்குத்து வாங்கிய ஆரோமை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போதும் அவர் சிகிச்சை பலனின்றி இறந்திருக்கிறார். போலீசின் பிடியில் இருக்கும் சாவத் கொன்றது நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை கிட்டும் என போலீசார் கூறியிருக்கிறார்கள்.