sco மாநாடு twitter
உலகம்

SCO மாநாடு: பயங்கரவாதம் குறித்து பிரதமர் மோடி அதிரடி பேச்சு.. உற்று கவனித்த புதின், ஜி ஜின்பிங்!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாட்டில் பயங்கரவாதம் குறித்து பிரதமர் மோடி பேசியதை, பிற நாட்டுத் தலைவர்கள் உற்றுக் கவனித்தனர்.

Prakash J

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டை நேற்று (ஜூலை 4) இந்தியா தலைமையேற்று நடத்தியது. இந்த மாநாடு SECURE என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு நடந்தது. காணொளி மூலம் நடைபெற்ற மாநாட்டுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார். இம்மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, கஜகஸ்தான் அதிபர் காசிம் ஜோமார்ட் டோகாயேவ், ஈரான் அதிபா் இப்ராகிம் ரெய்சி உள்ளிட்ட பிற நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இதில் பேசிய பிரதமர் மோடி, “பிராந்தியங்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாடுகளுக்கும் பயங்கரவாதம் என்பது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. மேலும் அமைதியை முற்றிலுமாக சீர்குலைக்கிறது. பயங்கரவாதத்தில் இரட்டை வேடம் போடக்கூடாது. பயங்கரவாதத்துக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடுகளைக் கண்டிக்க ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தயங்கக் கூடாது. பயங்கரவாதத்துக்கு எதிராக நாம் போராட வேண்டும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை சில நாடுகள் கொள்கையாகக் கொண்டுள்ளன.

மோடி

பயங்கரவாதிகளுக்கு கிடைக்கும் நிதியைத் தடுக்க உலக நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை விரிவுப்படுத்த வேண்டும். இளைஞா்களிடையே தீவிரவாதக் கொள்கைகள் பரவி வருவது அதிகரித்துள்ளது. அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளிலும் நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது நிலவும் மொழி தடையை அகற்ற இந்தியாவின் ஏஐ அடிப்படையிலான தொழில்நுட்பத்தை பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான உதாரணமாகும். இதன்மூலம் ஐநா உள்பட பிற உலகளாவிய அமைப்புகளின் பரிணாம வளர்ச்சிக்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உதாரணமாக இருக்கும். இந்த குழுவில் ஈரான் புதிதாக இணைவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

இதில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், “பயங்கரவாதத்தில் ஈடுபடும் தனி நபர்கள், சமூகம் அல்லது நாடுகளை எதிர்த்து நாம் முழு உறுதியுடன் போராட வேண்டும். பயங்கரவாதத்தின் கொடுமையை எதிர்த்துப் போரிடுவதில் பாகிஸ்தான் செய்த தியாகங்கள் ஈடு இணையற்றவை. அரசியல் காரணங்களுக்காக, மத சிறுபான்மையினரை தீயவர்களாக சித்தரிக்கும் போக்கு நிறுத்தப்பட வேண்டும்” என்றார்.

ஜின்பிங், ஷெபாஸ் ஷெரீப்

சீன அதிபர் ஜி ஜின்பிங், “சீனா - பாகிஸ்தானை சாலைவழி இணைப்பதற்கு, பி.ஆர்.ஐ., எனப்படும், 'பெல்ட் அண்டு ரோடு இனிஷியேட்டிவ்' என்ற திட்டத்தை சீனா செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இடம் பெறுவதால், அதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த திட்டத்துக்கு, எஸ்.சி.ஓ., உறுப்பு நாடுகள் ஆதரவு அளிக்க வேண்டும்” என்றதுடன் அமெரிக்காவையும் மறைமுகமகமாகச் சாடினார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், "தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடுதல், அவற்றை ஊக்குவிக்கும் நாடுகளைத் தடுப்பது, போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பது ஆகியவைதான் எஸ்சிஓ அமைப்பின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். வெளிநாட்டு வர்த்தகத்தில் உள்நாட்டு கரன்சிகளை ஊக்குவிக்கும் நாடுகளுடன் உறவை மேம்படுத்த ரஷ்யா முடிவு செய்துள்ளது. அதுபோன்ற நாடுகளுடன் ஓர் அமைப்பை ஏற்படுத்தவும் ரஷ்யா திட்டமிட்டுள்ளது" என்றதுடன் உக்ரைன் நாட்டையும் சாடினார்.

விளாடிமிர் புதின்

உலகில் மிகப்பெரிய கூட்டமைப்பாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உள்ளது. இதில் ரஷ்யா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஜஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் உள்ளன. கடந்த 2017ஆம் ஆண்டில் எஸ்சிஓ கூட்டமைப்பில் இணைந்த இந்தியா, முதல்முறையாக அதன் தலைமைப் பொறுப்பை நேற்று ஏற்று நடத்தியது குறிப்பிடத்தக்கது.

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் 9ஆவது உறுப்பு நாடாக ஈரான் இணைந்தது. எஸ்சிஓ கூட்டமைப்பில் பெலாரஸை உறுப்பு நாடாக இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளும் மாநாட்டில் தொடங்கப்பட்டன. அந்த நாடு, அடுத்த ஆண்டு நடைபெறும் மாநாட்டில் கூட்டமைப்பின் 10ஆவது உறுப்பு நாடாக இணையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.