உலகம்

லெபனானுக்கு எதிராக சவுதி போர்: ஷியா தலைவர் புகார்

webteam

லெபனானுக்கு எதிராக சவுதி அரேபியா அரசு போர் தொடுத்துள்ளதாக, லெபனானின் சக்தி வாய்ந்த அமைப்பான ஹிஸ்புல்லா ஷியா தலைவர் ஹாசன் நஸ்ரல்லா தெரிவித்துள்ளார். 

லெபனான் பிரதமர் சாத் அல் ஹரிரி, சமீபத்தில் சவுதி அரேபியா சென்றார். அங்கிருந்த படியே, ’தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பதவி விலகுகிறேன்’ என்று அறிவித்தார். ஆனால் அதை லெபனான் அதிபர் மைக்கேல் ஆன் ஏற்கவில்லை. அவர் உடனடியாக நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என்று அதிபர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் லெபனானின் பலம் வாய்ந்த ஹிஸ்புல்லா ஷியா அமைப்பின் தலைவர் ஹாசன் நஸ்ரல்லா, சவுதி அரசு கட்டாயப்படுத்தியதால்தான் ஹரிரி பதவி விலகியுள்ளதாகக் கூறியுள்ளார்.

அதோடு, லெபனானுக்கு எதிராக சவுதி அரசு, போர் அறிவித்துள்ளதாகவும் ஹரிரியின் விருப்பத்திற்கு மாறாக அவரை பிடித்து வைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். அதோடு லெபனானுக்கு எதிராக இஸ்ரேலை தூண்டுவதாகவும், இது ஆபத்தானது என்றும் கூறியுள்ளார். இந்த ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.