உலகம்

'விஷன் 2030'-ன் அடுத்த திட்டம்... ராமாயணம், மகாபாரதம் படிக்கப்போகும் சவுதி மாணவர்கள்!

'விஷன் 2030'-ன் அடுத்த திட்டம்... ராமாயணம், மகாபாரதம் படிக்கப்போகும் சவுதி மாணவர்கள்!

webteam

சவுதி அரேபியாவில் மாணவர்களுக்கு இந்தியாவின் புராணங்களான ராமாயணம், மகாபாரதம் ஆகியவை கற்றுக்கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

'விஷன் 2030' என்ற திட்டத்தின் கீழ் சவுதி அரேபியாவில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார் அந்நாட்டு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான். இந்தத் திட்டத்தின் கீழ் புதிய முயற்சியாக, வெவ்வேறு கலாசாரங்களைப் பற்றிய கூடுதல் அறிவை வளர்த்தும் கொள்ளும்படி, பிற நாடுகளின் வரலாறு மற்றும் கலாசாரங்கள் பற்றிய பாடங்களை சவுதி மாணவர்கள் படிக்கவைக்க முடிவெடுத்து, அதற்காக ஆய்வு நடத்த சல்மான் முடிவெடுத்துள்ளார். இதன் ஒரு பகுதியாக, மாணவர்களுக்கு இந்தியாவின் புராணங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதம் கற்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மாணவர்களின் கலாசார அறிவு மற்றும் வெளிப்பாட்டை விரிவுபடுத்துவதற்காக, உலகளவில் குறிப்பிடத்தக்க இந்திய கலாசாரங்களான யோகா மற்றும் ஆயுர்வேதம் குறித்து இந்த ஆய்வில் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமாயணம் மற்றும் மகாபாரதம் போல் புதிய 'விஷன் 2030'-ல் ஆங்கில மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சவுதி அரசு மேற்கொண்டுள்ள இந்த மாற்றங்கள் குறித்து, நவுப்-அல்-மார்வாய் என்ற ட்விட்டர் பயனர், தனது குழந்தையின் புத்தகத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளார். இது, கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பான அனைத்து குழப்பங்களையும் போக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும், அந்த நபர், ''சவுதி அரேபியாவின் புதிய விஷன் 2030 மற்றும் பாடத்திட்டங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய தாராளமயமான மற்றும் சகிப்புத்தன்மையுள்ள எதிர்காலத்தை உருவாக்க உதவும். இதில் பலவிதமான கலாசாரங்கள் உள்ளன.

சமூக ஆய்வுகள் புத்தகத்தில் இந்து மதம், பவுத்தம், ராமாயணம், கர்மா, மகாபாரதம் மற்றும் தர்மம் ஆகியவற்றின் கருத்துகள் மற்றும் வரலாறு ஆகியவை அடங்கியுள்ளன. இதனால் சவுதி அரேபியாவின் மாணவர்கள் இப்போது புதிய பாடத்திட்டத்தின் கீழ் ராமாயணம், மகாபாரதம் போன்ற இந்து காவியங்களின் விவரங்களைக் கற்றுக்கொள்வார்கள்" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

'விஷன் 2030' என்ற பெயரில் சவுதி சமூகத்தை நவீனமாக்கும் வகையில் அந்நாட்டு அரசு அதிகப்படியான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சவுதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஏற்பாட்டில் இந்த சீர்த்திருத்த நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் இதுவரை அந்நாட்டில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக உடைக்கப்பட்டு வருகிறது.

சவுதி அரேபியாவில் கடந்த 26 ஆண்டுகளாக பெண்கள் கார் ஓட்ட தடை இருந்தது. நீண்ட கால கோரிக்கையை ஏற்று பெண்கள் கார் ஓட்ட விதித்திருந்த தடையை 2018-ல் சவுதி அரேபிய அரசு நீக்கியது. இதேபோல், கால்பந்து போட்டியை பார்க்க இருந்த தடையும் நீக்கப்பட்டது. வரலாற்றிலேயே முதன்முதலாக ஒரு பெண் தூதுவரை சவுதி அரேபியா நியமனம் செய்தது. சவுதி அரேபியாவின் இளவரசி ரீமா பிண்ட் பாண்டார் அல் சவுத்தை அமெரிக்காவுக்கான தூதுவராக சவுதி அரேபியா நியமனம் செய்தது. இதேபோல் செய்தி வாசிப்பாளர் போன்ற பல பணிகளில் பெண்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், தற்போது கல்வித் துறையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.