உலகம்

உலகின் மிகப்பெரிய ஓவியம்: ஏழைக் குழந்தைகளுக்கு நிதி திரட்ட புது முயற்சி

உலகின் மிகப்பெரிய ஓவியம்: ஏழைக் குழந்தைகளுக்கு நிதி திரட்ட புது முயற்சி

webteam

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஹோட்டலில் 2 ஆயிரம் சதுர மீட்டர் அளவுள்ள பரப்பில் உலகின் மிகப்பெரிய ஓவியத்தை வரைந்து கவனம் ஈர்த்திருக்கிறார் பிரபல பிரிட்டிஷ் ஓவியர் சச்சா ஜாஃப்ரி. ஏழைக் குழந்தைகளின் கல்விச் சேவைக்கு 30 மில்லியன் டாலர் நிதி திரட்டும் முயற்சியாக இந்த ஓவிய சாதனை செய்யப்பட்டுள்ளது.

அறக்கட்டளையின் நிதி திரட்டும் முயற்சிக்காக வரையப்பட்ட 44 வயதாகும் ஜாப்ரியின் இந்த ஓவியம் பிப்ரவரி 2021 இல் ஏலம் விடப்படுகிறது.

"மிகப்பெரிய ஓவியத்தின் ஒரு பகுதியை அவர்கள் சொந்தமாக வைத்திருப்பார்கள். ஆனால் அதைவிட அவர்கள் வரலாற்றின் ஒரு பகுதியையும், இறுதியில் மனிதகுலத்தையும் வைத்திருப்பார்கள்" என்று கவித்துவமாகப் பேசும் ஓவியர் ஜாஃப்ரி,

"இந்த ஓவியம் பூமியின் ஆத்மா, இயல்பு, மனிதநேயம், தாயின் அன்பு மற்றும் வளர்ப்பு, தந்தையின் வழிகாட்டுதல் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைச் சித்தரிக்கிறது" என்கிறார்.

இந்த ஓவியத்தை கொரோனா பரவல் தொடங்கிய காலகட்டத்தில் வரையத் தொடங்கினார் ஓவியர் ஜாப்ரி. தினமும் 18 முதல் 20 மணி நேரங்களை ஓவியம் வரைவதற்காகச் செலவிட்டிருக்கிறார். 5 ஆயிரம் லிட்டர் பெயிண்ட், ஆயிரம் தூரிகைகள் உதவியுடன் 300 லேயர்கள் கொண்ட பிரம்மாண்ட ஓவியத்தை அவர் தீட்டியுள்ளார்.

ஏழைக்குழந்தைகளுக்கு உதவி செய்யும் மனிதநேய முயற்சிக்கு கிரிக்கெட் வீரர் வீராட் கோலி, அமெரிக்க நடிகை இவா லங்கோரியா, எழுத்தாளர் தீபக் சோப்ரா, மாடல் நடிகை புரூக்ளின் பெக்காம், நடிகர் டேவிட் வில்லியம்ஸ், மேக்கப் கலைஞர் ஹுடா கட்டன் உள்ளிட்ட பல பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.