புதின் எக்ஸ் தளம்
உலகம்

”பணியின் உணவு இடைவேளையில் கூட உடலுறவு கொள்ளலாம்..” - ரஷ்ய அரசு பிறப்பித்த உத்தரவின் பின்னணி என்ன?

வேலைசெய்யும் இடங்களில் உணவு மற்றும் தேநீர் இடைவேளையின்போது தம்பதிகள் உடலுறவுக்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு ரஷ்ய அரசு தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷ்யாவில், சமீபகாலமாக குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்துவருகிறது. உக்ரைனுக்கு எதிராக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போர் நடத்திவரும் ரஷ்யாவுக்கு இது மிகப்பெரிய கவலையை அளித்துள்ளது. இதனால் இப்போது பெரிய பிரச்னை இல்லையென்றாலும், வரும்காலத்தில் இது மிகப் பூதாகரமாக வெடிக்கும் ஆபத்து இருக்கிறது.

இந்த நிலையில், பணிபுரியும் இடத்தில் இடைவேளையின்போது உடலுறவு கொள்ளுமாறு ரஷ்யர்களுக்கு அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர், “ரஷ்ய மக்களைப் பாதுகாப்பதே எங்கள் மிக உயர்ந்த தேசிய முன்னுரிமை. ரஷ்யாவின் தலைவிதி, நம்மில் எத்தனை பேர் இருப்போம் என்பதைப் பொறுத்தது. இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, ”மக்கள் குழந்தைகள் அதிக அளவில் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், நமது முன்னோர்கள் 8 அல்லது 10 குழந்தைகளைப் பெற்றெடுத்தனர்” எனவும் அவர் ஏற்கெனவே வலியுறுத்தி இருந்தார்.

புதின்

அதேபோல் ரஷ்யாவின் சுகாதார அமைச்சர் டாக்டர் யெவ்ஜெனி ஷெஸ்டோபலோவ்-வும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். அவர், "மக்கள்தொகையை வளர்த்தெடுப்பது முக்கியமானது. இதற்கு வேலை ஒரு தடையாக இருக்கக்கூடாது. குடும்ப விரிவாக்கத்திற்கு மதிய உணவு மற்றும் காபி இடைவேளையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வேலையில் மிகவும் பிஸியாக இருப்பதால் குழந்தையைத் தள்ளிப்போடுகிறோம் எனச் சொல்வதை எல்லாம் ஏற்க முடியாது. வேலை செய்யும்போது இடைவெளியில்கூட இதை நீங்கள் செய்யலாம். இதை எல்லாம் தள்ளிப் போடக்கூடாது. வாழ்க்கை மிக விரைவாகச் செல்லும் ஒன்று. எனவே நாம் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பிரேக் நேரத்தைப் பயன்படுத்தி குழந்தைகளை உருவாக்குங்கள்" என தெரிவித்துள்ளார். ரஷ்ய அரசு, இப்படி தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க; உ.பி. | ”அப்பாவிகளை ஏன் கைது செய்தீர்கள்?” கண்டித்த நீதிபதி.. விபரீத முடிவு எடுத்த உதவி ஆய்வாளர்!

ரஷ்யாவில் தற்போதுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, பெண் ஒருவர் 2.1 என்ற சதவீதம் என்ற அளவில் பெற்றெடுக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. ஆனால் தற்போது இது 1.5 சதவீதமாகக் குறைந்துள்ளது.1999-க்குப் பிறகு தற்போது ரஷ்யாவில் இதுவரை இல்லாத அளவுக்கு, கடந்த ஜூன் மாதம் ஒரு லட்சத்திற்கும் குறைவான குழந்தைகள்தான் பிறந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு முதல் பாதியில் பிறந்த குழந்தைகளைவிட, தற்போது 2024 முதல் பாதியில் 16 ஆயிரம் குழந்தைகள் குறைவாகப் பிறந்துள்ளதாக ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவர நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே காலகட்டத்தில் உக்ரைனில் நடைபெற்று வரும் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 49 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் மக்கள்தொகை வீழ்ச்சி 18 சதவீதம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, ரஷ்யாவில் குறைந்துவரும் பிறப்புவிகிதத்தை அதிகரிக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. 18-40 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு இதற்காகப் பல இலவச சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், ரஷ்யாவின் செல்யாபின்ஸ்க் பகுதியில், பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஊக்கத்தொகையை அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் 24 வயதிற்குட்பட்ட பெண்கள் குழந்தை பெற்றுக்கொண்டால், முதல் குழந்தைக்கு 8500 டாலர் (ரூ.7.12 லட்சம்) வழங்குவதாக அறிவித்துள்ளது. கருத்தடைக்கு கட்டுப்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது. விவாகரத்துக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் தட்யான்யா புட்ஸ்கயா, முதலாளிகள் அவர்களுடைய பெண் ஊழியர்களை குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஊக்குவிக்க வலியுறுத்தும் கொள்கைக்கு பரிந்துரை செய்துள்ளார்.

அதுபோல் அரசியல்வாதியான அன்னா குஸ்னெட்சோவா, ”பெண்கள் 19 அல்லது 20 வயதில் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் குடும்பம் மூன்று அல்லது அதற்கு மேலான குழந்தைகளைப் பெற முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: அதிர்ச்சி! பெண் தேர்வரின் அந்தரங்க உறுப்பில் சோதனை.. விசாரணைக்கு உத்தரவிட்ட அசாம் முதல்வர்!