ஹவால்டிமிர் எக்ஸ் தளம்
உலகம்

திடீரென உயிரிழந்த ‘ரஷ்ய உளவாளி’ ஹவால்டிமிர் திமிங்கலம்.. விசாரணை நடத்த முடிவு.. பிரபலமானது எப்படி?

Prakash J

கடந்த 2019ஆம் ஆண்டு உலகமெங்கும் பேசுபொருளான ஹவால்டிமிர் என்ற பெலுகா வெள்ளை திமிங்கலம், 14 அடி நீளமும், 2,700 பவுண்டு எடையும் கொண்டது. ’ரஷ்ய உளவாளி’ எனப் பலராலும் இந்த திமிங்கலம் அழைக்கப்படுகிறது. 2019ஆம் ஆண்டு, ரஷ்ய கடல் எல்லையில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் நார்வேயின் வடக்கு கடல் பகுதியில் உள்ள இங்கோயா தீவுக்கு அருகில் இது முதல்முறையாக கண்டுபிடிக்கப்பட்டது.

அப்போது, இதன் தோற்றம் மர்மமாக இருந்ததைத் தொடர்ந்து சந்தேகத்திற்கு வழிவகுத்ததுடன், உலகளவிலும் பேசுபொருளானது. திமிங்கலத்தில் கேமராவுடன் கூடிய சில கருவிகள் பொருத்தப்பட்டிருந்ததுதான் இந்தப் பேசுபொருளுக்குக் காரணம். அந்த கருவிகளில் ரஷ்யாவில் உள்ள St செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சிட்டி என்ற பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது. மேலும், இந்த பெலுகா திமிங்கலம் மனிதர்களுடன் மிகச் சகஜமாகவே இருந்தது. மீனவர்களுடன் நெருக்கமாக இருந்ததும் சந்தேகத்தை வரவழைத்தது. பொதுவாக, இந்த பெலுகா வகை திமிங்கலங்கள் மக்கள் நடமாட்டமே இல்லாத கடற்கரைகளில் உள்ள குளிர்ச்சியான ஆர்டிக் நீரில் வசிக்கும். இவை மனிதர்களைக் கண்டாலே தெறித்து ஓடக்கூடியவை. ஆனால், இந்த பெலுகா திமிங்கலம் மனிதர்களுடன் மிகச் சகஜமாகவே இருந்ததுதான் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க: அமைதிக்கு திரும்பிய மணிப்பூரில், மீண்டும் வெடித்த வன்முறை.. 2 பேர் பலி!

இதன் காரணமாகவே அந்த திமங்கலம் ரஷ்ய உளவாளியாக இருக்கலாம் என பேச்சு எழுந்தது. உலகெங்கும் இந்தப் பேச்சு அதிகரித்தநிலையில், நார்வே அரசு இதுகுறித்த எச்சரிக்கையைக்கூட வெளியிட்டது. அதாவது, ஒஸ்லோவிற்கு அருகில் உள்ள ஃப்ஜோர்டில் காணப்படும் இந்த பெலுகா திமிங்கலத்துடன் எந்தவொரு தொடர்பையும் வைத்திருக்கக்கூடாது என்று அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டது. அதேநேரத்தில், ’ரஷ்ய சிட்டி’ எனப் பெயர் பொறிக்கப்பட்டு இருந்தாலும் ரஷ்யா அதற்கு உரிமை கோரவே இல்லை.

இந்த நிலையில், ஹவால்டிமிர் என்ற அந்த பெலுகா திமிங்கலம் தற்போது உயிரிழந்துள்ளது. அந்த திடீர் உயிரிழப்பு, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த திமிங்கலத்தின் உடல், தெற்கு நோர்வேயின் கடற்கரையில் கடந்த வார இறுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திமிங்கலத்தில் குறிப்பிடத்தக்க வெளிப்புற காயங்கள் எதுவும் காணப்படவில்லை. என்றாலும், மரணத்திற்கான சரியான காரணத்தை தீர்மானிக்க விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து நார்வேயின் பொது ஒளிபரப்பாளரான ஸ்ட்ராண்ட், “இது முற்றிலும் பயங்கரமானது. ஆகஸ்ட் 30ஆம் தேதிவரை அது நல்ல நிலையில் இருந்தது. எனவே அதற்குப்பிறகு என்ன நடந்திருக்கும் என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ஜார்க்கண்ட்: போலீஸ் உடற்தகுதித் தேர்வு.. மயங்கி விழுந்த 11 பேர் உயிரிழப்பு.. என்ன காரணம்?