உலகம்

உக்ரைனில் திடீர் விசிட் அடித்த ரஷ்ய அதிபர் புதின்.. எந்த இடம் தெரியுமா?

உக்ரைனில் திடீர் விசிட் அடித்த ரஷ்ய அதிபர் புதின்.. எந்த இடம் தெரியுமா?

webteam

உக்ரைன் நகருக்குள் ரஷ்ய அதிபர் புதின் திடீர் பயணம் மேற்கொண்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஓராண்டை கடந்து முடியாத போர்!

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போர், கடந்த பிப்ரவரி 24ஆம் தேதியுடன் ஒரு வருடத்தை நிறைவு செய்தது. என்றாலும், இப்போதுவரை இருதரப்பிலும் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை என்பதால், தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் நிதியுதவியும் ஆயுதங்களும் அளித்து வருகின்றன.

ஐ.நாவில் தீர்மானம்.. இந்தியா புறக்கணிப்பு

இப்போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக சீனாவும், இந்தியாவும் வலியுறுத்தி வருகின்றன. இந்தச் சூழலில், `உக்ரைனில் இருந்து ரஷ்ய ராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும்' என்பதை வலியுறுத்தி சமீபத்தில் ஐ.நா. பொது சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 141 நாடுகள் ஆதரவாகவும், 7 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்தியா உள்பட 32 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன.

உக்ரைனுக்குள் புதின்.. திடீர் பயணத்தால் பரபரப்பு

போர் தொடங்கி ஓராண்டை கடந்த நிலையில் முதல் முறையாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைனுக்குள் நுழைந்திருக்கிறார். உக்ரைனின் மரியுபோல் நகரில் புதின், இன்று திடீர் பயணம் மேற்கொண்டார். மரியுபோல் நகரை ரஷிய படைகள் கடந்த ஆண்டு மே மாதம் கைப்பற்றியது. தற்போது மரியுபோல் நகர் ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் அந்த நகருக்கு அதிபர் புதின் திடீர் பயணம் மேற்கொண்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

புதினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்!

முன்னதாக, ”ரஷ்ய படைகள் போர்க் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றன. அதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினே பொறுப்பு. உக்ரைனில் உள்ள குழந்தைகளை மீட்டு ரஷ்யாவுக்கு நாடு கடத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது” என சர்வதேச குற்ற நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. மேலும், அதிபர் புதின் மற்றும் ரஷ்ய அதிகாரியான மரியா அலெக்சீயேவ்னா வோவா-பெலோவா ஆகியோருக்கு எதிராக கைது வாரண்ட் உத்தரவையும் பிறப்பித்தது.

”உங்கள் உத்தரவு எங்களை ஒன்றும் செய்யாது” - ரஷ்யா

இதற்கு ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சக பெண் செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா, “சர்வதேச குற்ற நீதிமன்றத்தில் ரஷ்யா உறுப்பினராக இல்லை. இந்த அமைப்புடன் ரஷ்யா இணைந்தும் செயல்படவில்லை. அதனால், சர்வதேச குற்ற நீதிமன்றத்தில் இருந்து வரும் கைது வாரண்டும் சட்டப்படி செல்லத்தக்கதல்ல. அது எங்களை ஒன்றும் செய்யாது” எனத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.