ரஷ்யாவில் நாடு முழுவதும் 1 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு அதிபர் தேர்தல் இன்று தொடங்கியுள்ளது. காலை முதல் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். ரஷ்யா மட்டுமின்றி இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளின் தூதரகங்களிலும் வெளிநாடு வாழ் ரஷ்யர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
11 கோடியே 23 லட்சம் ரஷ்யர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வலுவான எதிர்க்கட்சி வேட்பாளர் இல்லாததால் புதின் மீண்டும் அதிபராக வாய்ப்புள்ளது.
வருகிற 17ஆம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர்தலில் நான்குமுனை போட்டி நிலவுகிறது. அதிபர் புதின் சுயேட்சையாக போட்டியிடும் சூழலில் கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய சுதந்திர ஜனநாயக கட்சி, புதிய மக்கள் கட்சி ஆகியவை களத்தில் உள்ளன.
புதினை எதிர்த்து போட்டியிட வலுவான வேட்பாளர் இல்லை எனக் கூறப்படுவதால் அவர் 5-ஆவது முறையாக அதிபராக வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 3 நாட்கள் நடைபெறும் வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.
2018ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் புதின் 76.7 % வாக்குகளை பெற்றிருந்தார். புதின் கொண்டுவந்த அரசியல் சாசன திருத்தத்தின்படி 2036-ஆம் ஆண்டு வரை அவர் அதிபராக தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.