உலகம்

``உக்ரைன் மக்களுக்கு உதவிகள், பாதுகாப்புகள் தருவோம்”- ரஷ்யா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி

``உக்ரைன் மக்களுக்கு உதவிகள், பாதுகாப்புகள் தருவோம்”- ரஷ்யா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி

நிவேதா ஜெகராஜா

உக்ரைன் மக்களுக்கு உதவிகளை தருவதுடன், பாதுகாப்பும் வழங்குவது குறித்து ரஷ்யா கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்திருக்கிறது. இத்தீர்மானத்திற்கு ஆதரவாக ரஷ்யா, சீனா ஆகிய 2 நாடுகள் மட்டுமே வாக்களித்த நிலையில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 13 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.

உக்ரைனில் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கோரி ஐநா பாதுகாப்பு சபையில் ரஷ்யா தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தது. 15 உறுப்பினர்கள் கொண்ட அந்த சபையில் ரஷ்யா, சீனா ஆகிய இரு நாடுகள் மட்டுமே தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. வாக்கெடுப்பிற்கு முன்னதாக பேசிய ஐநாவுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கிரீன்ஃபீல்டு, “உக்ரைன் மீது தான் நடத்தும் தாக்குதலை பற்றி குறிப்பிடாமல் ரஷ்யா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. உக்ரைனில் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதற்கு முழு காரணமும் ரஷ்யாதான். ஆனால் அதைப்பற்றி பேசாமல் அனைத்து நாடுகளும் அம்மக்களுக்கு உதவ வேண்டும் என கோருவது தவறு” என்று அவர் தெரிவித்தார்.

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக ஐநாவில் ஏற்கனவே கொண்டு வரப்பட்ட 3 தீர்மானங்களில் வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்தது. இ்ப்போது அதே விவகாரத்தில் ரஷ்யா கொண்டு வந்த தீர்மானத்திலும் வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்துள்ளது. இதன் மூலம் உக்ரைன் பிரச்னையில் இந்தியா தொடர்ந்து நடுநிலை வகிப்பது உறுதியாகியுள்ளது.