யெவ்ஜெனி பிரிகோஸின், புடின் ட்விட்டர்
உலகம்

வாக்னர் குழுத் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸின் பலி? மவுனம் கலைத்த ரஷ்யா!

வாக்னர் குழுத் தலைவரான யெவ்ஜெனி பிரிகோஸின் பலியானதாக கூறப்படும் விமான விபத்தின் பின்னணியில் சதி இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை புடின் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

Prakash J

ரஷ்ய அரசுக்கு எதிராக கடந்த மாதம், தனியார் வாக்னர் குழுத் தலைவராக இருந்த யெவ்ஜெனி பிரிகோஸின், உள்நாட்டுப் போரைத் தொடங்கி உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார். பின்னர் இருதரப்புக்கும் சமரசமான நிலையில், கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி, ரஷ்யா தலைநகர் மாஸ்கோ அருகே நடந்த விமான விபத்தில் யெவ்ஜெனி பிரிகோஸின் பலியானதாக தகவல்கள் வெளியாகின. வாக்னர் குழுவைச் சேர்ந்த 10 பேர் சென்ற விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது.

இதில் விமானத்தில் பயணம் செய்த 10 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விமானத்தில் பயணித்தவர்களின் பட்டியலில் யெவ்ஜெனி பிரிகோஜின் பெயரும் இருப்பதால் அவரும் விபத்தில் பலியானதாக நம்பப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகார்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை. அதேநேரத்தில் ரஷ்ய காவல் துறையினர் இதுகுறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். என்றாலும், இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 10 உடல்களின் அடையாளங்களையும் அவர்கள் அதிகார்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

விபத்து நடந்த பகுதியில் இருக்கும் உள்ளூர் மக்கள், விமானம் தரையில் விழுவதற்கு முன்பு குண்டு வெடித்ததுபோல சத்தம் கேட்டதாக செய்தி நிறுவனங்களுக்கு பேட்டி அளித்துள்ளனர். இதனால், யெவ்ஜெனி பிரிகோஸின், ரஷ்ய அரசுக்கு எதிராக புரட்சி செய்ததால், அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனப் பல்வேறு தரப்பில் இருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதற்கு ரஷ்யாவின் கடந்தகால நிகழ்வுகளை எடுத்துக்காட்டுகின்றனர். குறிப்பாக, அமெரிக்க, மேற்கத்திய நாடுகளின் அதிகாரிகள், “இது விபத்து அல்ல; ஏவுகணை மூலம் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. தனக்கு எதிரானவர்களை அழித்துவிடுவது என்பது புடினின் நீண்டகால வரலாறு. அதேபோல் பிரிகோஸின் குறிவைத்து கொல்லப்பட்டுள்ளார்’’ என்கின்றனர்.

இந்த நிலையில் யெவ்ஜெனி பிரிகோஸின் பலியானதாக கூறப்படும் விமான விபத்தின் பின்னணியில் சதி இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை புதின் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதுகுறித்து அதிபர் புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில் "யெவ்ஜெனி பிரிகோஜின் உட்பட விமான பயணிகளின் துயர மரணம் பற்றி நிறைய யூகங்கள் உள்ளன. அந்த யூகங்கள் மேற்கத்திய நாடுகளிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட கோணத்தில் வெளியிடப்படுகின்றன. அவை அனைத்தும் முற்றிலும் பொய்” எனத் தெரிவித்துள்ளார்.

’பிரிகோஸினின் மரணம் அதிகார்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டதா’ என அவரிடம் கேள்வி எழுப்பியதற்கு, “இதுகுறித்து மரபணு உள்ளிட்ட தேவையான அனைத்துச் சோதனைகளும் தற்போது மேற்கொள்ளப்படும். அதுகுறித்து அதிகார்பூர்வமாக முடிவுகள் வந்துபின்பு, விவரங்கள் தெரிவிக்கப்படும்” எனத் தெரிவித்த அவர், “ரஷ்ய அதிபர் புடினை, பிரிகோஸின் சமீபத்தில் எங்கும் சந்திக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

யெவ்ஜெனி பிரிகோஸின்

இறுதியாக, “பிரிகோஸின் இறுதிச்சடங்கில் புடின் கலந்துகொள்வாரா’ என நிருபர் கேள்வி எழுப்ப, அதற்குப் பதிலளித்த பெஸ்கோவ், ”அதற்குச் சாத்தியமில்லை. தற்போது புடினுக்கு நிறைய நிகழ்வுகள் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் புடின், “விமான விபத்தில் பலியானவர்கள் உக்ரைன் போரில் கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளனர். நாங்கள் இதை நினைவில் கொள்கிறோம். ஒருபோதும் அவர்களை நாங்கள் மறக்கமாட்டோம்” எனத் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.