உக்ரைன் உடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
உக்ரை மீது ரஷ்ய ராணுவம் இரண்டு நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. நேட்டோ அமைப்பு உடனான நெருக்கத்தை சுட்டிக்காட்டி ரஷ்யா இந்த தாக்குதலை தொடுத்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து உலக நாடுகள் பலவும் கவலை தெரிவித்து வருகின்றன. போர் வேண்டாம் என உலக மக்கள் பலரும் தங்களது குரலை பதிவு செய்து வருகின்றனர்.
உக்ரைன் தலைநகர் கீவ்வை முழுமையாக ரஷ்ய ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. தலை நகரின் மையப்பகுதியில் இருந்து வெறும் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரஷ்ய ராணுவம் நகருக்குள் மிக வேகமாக நுழைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். அடக்குமுறையில் இருந்து உக்ரைன் மீட்கப்பட வேண்டும் என்பதே எங்களின் விருப்பம் என்று அவர் கூறியுள்ளார்.
உக்ரைன் உடன் ரஷ்யா இரண்டாவது நாளாக சண்டையிட்டு வரும் நிலையில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
முன்னதாக, ரஷ்யாவுடனான போரை எதிர்கொள்ளும் நிலையில், உலக நாடுகள் தங்களுக்கு உதவவில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேதனை தெரிவித்துள்ளார்.