உலகம்

சலுகை விலையில் ரஷ்ய கச்சா எண்ணெய் - போட்டி போட்டு கொண்டு வாங்கும் இந்திய நிறுவனங்கள்!

சலுகை விலையில் ரஷ்ய கச்சா எண்ணெய் - போட்டி போட்டு கொண்டு வாங்கும் இந்திய நிறுவனங்கள்!

ஜா. ஜாக்சன் சிங்

பொருளாதாரத் தடையின் எதிரொலியாக ரஷ்யாவின் கச்சா எண்ணெய் பெருமளவு சலுகை விலையில் சந்தையில் விற்கப்படுகின்றன. இதனால் இந்தியாவைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள் போட்டிப் போட்டு கொண்டு ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்கி வருகின்றன.

உக்ரைன் மீது போர் தொடுத்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதனால் அந்நாட்டின் வர்த்தகம் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. மேலும், பொருளாதாரத் தடை காரணமாக ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதையும் பல நாடுகள் நிறுத்திக் கொண்டன. இதனால் ரஷ்ய கச்சா எண்ணெய், வாங்க ஆள் இல்லாமல் பீப்பாய் பீப்பாயாக சர்வதேச சந்தைகளில் குவிந்து கிடக்கின்றன.

இதனால் பெரும் நஷ்டத்தை சந்தித்து வந்த ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள், கடந்த வாரம் அதிரடியாக தங்கள் கச்சா எண்ணெயின் விலையை குறைத்தன. அதன்படி, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்க்கு 20 - 25 டாலர்கள் வரை விலை குறைக்கப்பட்டன.

இந்நிலையில், இந்த விலைக் குறைப்பினை, தங்களுக்கு சாதகமாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. அந்த வகையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) சார்பில் 3 மில்லியன் (30 லட்சம்) பீப்பாய்களை வாங்குவதற்கு கடந்த வாரம் வாங்கப்பட்டன. அதேபோல, கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் (ஹெச்பிசிஎல்) 2 மில்லியன் ரஷ்ய கச்சா எண்ணெய் பீப்பாய்களை வாங்கியுள்ளன.

மற்ற இந்திய எண்ணெய் நிறுவனங்களும் ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க போட்டா போட்டியில் ஈடுபட்டுள்ளன. ஆனால், இந்தப் போட்டியில் இருந்து ரிலையன்ஸ் பெட்ரோலிய நிறுவனம் மட்டும் ஒதுங்கியுள்ளது. அமெரிக்காவுடன் பல வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால், ரஷ்ய கச்சா எண்ணெய்யை தவிர்க்கும் முடிவை அது எடுத்திருப்பதாக தகவறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.