உக்ரைனில் உள்ள இரண்டு ரஷ்ய ஆதரவு கிளர்ச்சி பிராந்தியங்களை சுதந்திர நாடுகளாக அறிவிக்கக் கோரும் வேண்டுகோளை தீவிரமாக பரிசீலித்து வருவதாக ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதின் தெரிவித்துள்ளார்.
உக்ரைனை ஆக்கிரமிக்கும் முயற்சியின் ஒருபகுதியாக, அந்நாட்டு எல்லைப் பகுதிகளில் தனது லட்சக்கணக்கான ராணுவ வீரர்களை ரஷ்யா நிறுத்தியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. உக்ரைன் மீது போர்த் தொடுக்கக் கூடாது என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் வலியுறுத்தி வரும் நிலையில், தங்களுக்கு போர் தொடுக்கும் எண்ணமில்லை என்று ரஷ்யா தொடர்ந்து கூறி வருகிறது. உக்ரைனில் எப்போது வேண்டுமானாலும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, உக்ரைனில் இருக்கும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் நிரம்பியிருக்கும் பிராந்தியங்கள் அங்குள்ள மக்களை ரஷ்யாவுக்கு அனுப்பி வருவதாகவும், உக்ரைன் ராணுவ வீரர்களை தாக்க காத்திருப்பதாகவும் அமெரிக்க உளவுத் துறை தெரிவித்து வருகிறது. எனினும், இதனை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
இந்நிலையில், கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சி பிராந்தியங்களான டோனேட்ஸ்க், லூஹான்ஸ்க் ஆகியவற்றின் தலைவர்கள் இரு தினங்களுக்கு முன்பு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதில், தங்கள் பிராந்தியங்களை சுதந்திர நாடுகளாக அறிவிக்குமாறு அவர்கள் கோரியிருந்தனர்.
இந்த சூழலில், அந்த நாடுகளின் கோரிக்கைகளை தீவிரமாக பரிசீலிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். உக்ரைனுக்கு சொந்தமான பிராந்தியங்களை சுதந்திர நாடுகளாக ரஷ்யா தன்னிச்சையாக அறிவித்தால், அது உக்ரைனில் மேலும் பதற்றத்தை உருவாக்கும் எனக் கூறப்படுகிறது.