விளாடிமிர் புதின், டொனால்டு ட்ரம்ப் எக்ஸ் தளம்
உலகம்

ட்ரம்ப்-க்கு வாழ்த்து தெரிவித்த புதின்| முடிவுக்கு வருமா உக்ரைன் போர்.. கடந்தகால அரசியல் சொல்வதென்ன?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்வு பெற்றுள்ள டொனால்டு ட்ரம்புவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனால் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

Prakash J

அமெரிக்காவில் நடைபெற்ற 47வது அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அமோக வெற்றிபெற்றுள்ளார். விரைவில் பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மறுபுறம், அவரைச் சுற்றி நிறைய எதிர்பார்ப்புகளும், சவால்களும் காத்திருக்கின்றன.

இந்த நிலையில், அமெரிக்க அதிபராய் மீண்டும் ட்ரம்ப் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, அவருக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனால் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகப் போரில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா ஆயுத உதவியும் நிதியுதவியும் அளித்துவருகின்றன. இதனால் அந்த இரண்டு நாடுகளும் நெருங்கிய நட்புறவில் உள்ளன. அதேநேரத்தில், ரஷ்யாவை அமெரிக்கா எதிரிநாடாகவே நினைத்துவருகிறது. மேலும், இந்தப் போர் நடவடிக்கையால் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்தச் செயல்கள் அனைத்தும் தற்போதைய அதிபர் ஜோ பைடன் ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட உத்தரவுகள். இது இன்றுவரை தொடர்ந்து வருகிறது.

இதையும் படிக்க: சட்டம்-ஒழுங்கு விவகாரம்|சந்திரபாபுவிடம் பேச தைரியமிருக்கா? பவன் கல்யாணைச் சாடிய ஜெகன் மோகன் ரெட்டி!

இந்தச் சூழலில்தான் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து எதிர்காலத்தில் அனைத்தும் மாறும் வாய்ப்பு உருவாகலாம் எனக் கூறப்படுகிறது. அந்த வகையிலேயே முதற்கட்டமாக புதின், ட்ரம்புக்கு வாழ்த்து கூறியுள்ளார். ட்ரம்ப்வும், புதினும் ஒரு புரிந்துணர்வுக்கு வரும் பட்சத்தில், வருங்காலத்தில் உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஒருவேளை ரஷ்யா ஒப்புக்கொள்ள மறுத்தால், அமெரிக்காவின் ட்ரம்பின் புதிய அரசோ, உக்ரைனுக்கு நிதி கொடுப்பதை நிறுத்தும். ஏனெனில், இதுகுறித்து அவர் முன்பே தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், தனது நாட்டு ராணுவத்தைப் பலபடுத்துவதாகவும் உறுதிபூண்டுள்ளார். இதுகுறித்து டொனால்டு ட்ரம்ப், ”இனிவரும் காலம் அமெரிக்காவின் பொற்காலமாக இருக்கும். போரை தொடங்குவேன் என கூறினார்கள்; நான் போரை நிறுத்துவேன். போரை நடத்துவதைவிட நிறுத்துவதில்தான் ஜனநாயகமும், சுதந்திரமும் உள்ளது. ஆனால், அமெரிக்காவுக்கு வலிமையான ராணுவம் தேவை என்பதை மறுப்பதற்கில்லை” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், போருக்கு ஒரு முடிவு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: சிகை அலங்காரம் செய்த காதலி.. கோபப்பட்ட காதலன்.. அமெரிக்காவில் அரங்கேறிய கொடூரம்!

முன்னதாக, டொனால்டு ட்ரம்ப் முதல்முறையாக 2016இல் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளிண்டன் போட்டியிட்டார். அப்போது டொனால்டு ட்ரம்புக்கு ஆதரவாக ரஷ்யா தலையீடு செய்ததாக கூறப்பட்டது. ஆனால் ரஷ்யா, அதை முற்றிலுமாக மறுத்திருந்தது. அதேபோல், டொனால்டு ட்ரம்ப், 2020ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் தோல்வியைத் தழுவிய பிறகு, ரஷ்ய அதிபர் புதினிடம் 7 முறை போனில் பேசியதாக அமெரிக்க பத்திரிகையாளர் எழுதியுள்ள புத்தகத்தில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து பாப் உட்வார்ட் என்பவர் தாம் எழுதியிருக்கும் புத்தகத்தில் எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டது முதல் பலமுறை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

புத்தகத்தில் உள்ள தகவல்களின்படி, 2021ஆம் ஆண்டு வெள்ளை மாளிகையைவிட்டு டொனால்டு ட்ரம்ப் வெளியேறிய பிறகு, ரஷ்ய அதிபர் புதினை கிட்டத்தட்ட ஏழு முறை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். மேலும் ஒருசமயம், தான் பேசுவதை உதவியாளர்கள் கேட்கக்கூடாது என்பதற்காக, அவர்களை வெளியேற்றிவிட்டு ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதினுடன் பேசினார் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், இரண்டு பேரும் என்ன பேசினார்கள் என்பதை புத்தகம் விவரிக்கவில்லை. அமெரிக்க பத்திரிகையாளரின் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இத்தகவல்கள் அதிபர் தேர்தலில் பேசுபொருளானது. ஆனால், இதை டொனல்டு ட்ரம்ப் மறுத்திருந்தார். அந்தப் புத்தகத்தில் உள்ள தகவல்களில் துளியும் உண்மையில்லை என தெரிவித்திருந்தார். அதுபோல், ரஷ்ய அரசும் அதிபர் புதினிடம் ட்ரம்ப் தொலைபேசியில் பேசவில்லை என்று தெரிவித்திருந்தது.

நேட்டோ விவகாரத்தில் என்ன பேசியிருந்தார்?

நோட்டோ ராணுவ அமைப்பிற்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் ஜெர்மனி உள்ளிட்ட மேற்குலக நாடுகள் பாரபட்சம் காட்டுவதாக ட்ரம்ப் ஏற்கனவே நேரடியாக குற்றம்சாட்டியிருந்தார். அதாவது, அவர்களுக்கும் சேர்த்து தாங்கள் செலவு செய்ய வேண்டுமா, ரஷ்யா விரும்பியதை செய்யட்டும் என்று ட்ரம்ப் அதிரடியாக பேசியிருக்கிறார். அதனால், நேட்டோ அமைப்பிற்கான நிதியை வெகுவாக அவர் குறைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதனால், ஒன்று ரஷ்யா வெற்றி பெறும் அல்லது போர் முடிவுக்கு வரும்.

இதையும் படிக்க: ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனுக்கு சென்ற வடகொரிய ராணுவம்.. ஆபாச படம் பார்க்கும் வீரர்கள்!