"உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும்" என்று ஐ.நா. சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உக்ரைன் மீது கடந்த மாதம் 24-ம் தேதி படையெடுத்த ரஷ்யா அங்கு மூன்று வாரங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் கிழக்கு பகுதியில் இருக்கும் சில பிராந்தியங்களில் அந்நாடு இனப்படுகொலையை நடத்தி வருவதாக கூறி, இந்த ராணுவ நடவடிக்கையை ரஷ்யா மேற்கொண்டுள்ளது. இந்த தொடர் தாக்குதலில் உக்ரைனில் இருக்கும் பல முக்கிய நகரங்கள் உருக்குலைந்து போயிருக்கின்றன. பல நகரங்கள் ரஷ்யாவிடம் வீழ்ந்துள்ளன.
இதனிடையே, ரஷ்ய படையெடுப்புக்கு எதிராக நெதர்லாந்தில் உள்ள ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் சில நாட்களுக்கு முன்பு வழக்கு தொடுத்தது. அதில், "உக்ரைனில் இனப்படுகொலை நடப்பதாக ரஷ்யா கூறுவது முற்றிலும் பொய்யானது. உக்ரைன் மீது போர் தொடுப்பதற்காகவே இதுபோன்ற குற்றச்சாட்டை ரஷ்யா ஜோடித்துள்ளது. உள்நோக்கத்துடன் ரஷ்யா மேற்கொண்டுள்ள இந்த மனிதாபிமானமற்ற செயலால் உக்ரைனின் கோடிக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உண்மையிலேயே ரஷ்யா செய்வதுதான் இனப்படுகொலை. எனவே, யதேச்சரிகாரப் போக்குடன் ரஷ்யா நடத்தி வரும் போரை நிறுத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீது இரண்டு வாரங்களுக்கும் மேலாக விசாரணை நடத்தி வந்த சர்வதேச நீதிமன்றம், இன்று தனது உத்தரவை வெளியிட்டது. இதுதொடர்பாக 15 நீதிபதிகள் கொண்ட அமர்வு பிறப்பித்த உத்தரவில், "உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்டு ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இனப்படுகொலை நடப்பதாக கூறி உக்ரைன் மீது போர் தொடுப்பதற்கு ரஷ்யாவுக்கு எந்தவித அதிகாரமும், உரிமையும் இல்லை. அந்த நாட்டில் ரஷ்யப் படையோ, அதன் ஆதரவு பெற்ற மற்ற துருப்புகளோ இனி எந்த தாக்குதலிலும் ஈடுபடக் கூடாது.
உக்ரைனில் ரஷ்யா இனப்படுகொலையை நிகழ்த்தி வருகிறது என்ற உக்ரைனின் வாதத்தை ஏற்பதற்கு முகாந்திரம் இருப்பதாகவே தோன்றுகிறது. இப்போதைக்கு உக்ரைனில் சம்பந்தப்பட்ட இரு தரப்பும் பிரச்னையை பெரிதாக்கும் செயல்களில் ஈடுபடக் கூடாது" எனக் கூறப்பட்டுள்ளது.