உலகம்

உக்ரைனில் திரையரங்கு மீது ரஷ்யா குண்டு வீச்சு: பொது மக்களின் நிலை என்ன?

உக்ரைனில் திரையரங்கு மீது ரஷ்யா குண்டு வீச்சு: பொது மக்களின் நிலை என்ன?

JustinDurai

உக்ரைனின் மரியுபோல் நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கியிருந்த திரையரங்கு மீது ரஷ்யா குண்டு வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல், உணவு வாங்குவதற்காக பொதுமக்கள் வரிசையாக நின்றுக் கொண்டிருந்தபோது, தாக்குதல் நடத்தியதில் 10 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

உக்ரைனின் தெற்குப் பகுதியான மரியுபோல் நகரை சுற்றி வளைத்துள்ள ரஷ்ய படைகள் அங்கு தீவிர தாக்குதலை நடத்தி வருகின்றன. இதனால் அங்குள்ள 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்காமலும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தச் சூழலில் மரியுபோல் நகரின் பல்வேறு பகுதிகளில் ரஷ்ய விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக நகர துணை மேயர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கியிருந்த திரையரங்கு மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை. அதே போல், உக்ரைனின் வடக்கு நகரமான செர்னிஹிவ் பகுதியில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியதில் உணவு வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்த பொதுமக்களில் 10 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இதையும் படிக்க: ரஷ்யாவை எதிர்க்க புதிய வியூகத்தை அமைக்கிறது நேட்டோ - அதிகரிக்கும் போர் பதற்றம்