உலகம்

எதிராக திரளும் உலக நாடுகள்... இந்தியா வரும் ரஷ்ய அமைச்சர்... காரணம் என்ன?

எதிராக திரளும் உலக நாடுகள்... இந்தியா வரும் ரஷ்ய அமைச்சர்... காரணம் என்ன?

sharpana

ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்தியா வருகிறார். 

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக தடைகளை விதித்து, பொருளாதார ரீதியாக ரஷ்யாவை முடக்க முயற்சி செய்து வருகின்றன. இந்தியாவும் ரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை வலியுறுத்தி வரும் நிலையில், செர்ஜி லாவ்ரோவ் டெல்லி வருகிறார். உக்ரைன் போர் 34 நாட்களாக தொடரும் நிலையில், செர்ஜி லாவ்ரோவ் இந்தியா வருவது கவனிக்கத்தக்கது. இவர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு மிகவும் நெருக்கமானவர் என சிறப்பு அடையாளம் காணப்பட்டவர்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோருடன் ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சரான செர்ஜி லாவ்ரோவ் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைனில் உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும் எனவும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் எனவும் இந்தியா வலியுறுத்தி வருகிறது. ஐநா வாக்கெடுப்பில் இந்தியா கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தடைகளை மீறி இந்தியாவுக்கு எரிவாயு விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் செர்ஜி லாவ்ரோவ் புது டெல்லியில் நடத்த உள்ள பேச்சுவார்த்தைகளில் விவாதிக்கப்படும் என ரஷ்ய அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். அமெரிக்க டாலரை தவிர்த்து, ரஷ்ய ரூபிள் மற்றும் இந்திய ரூபாய் மூலம் வர்த்தகம் நடத்துவது குறித்தும் ஆலோசனைகள் நடைபெறவுள்ளன.

போர் விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு தொடர்பான சாதனங்களை ரஷ்யாவிடமிருந்து விலைக்கு வாங்க இந்தியா பல்வேறு ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளது. இதில் எஸ் 500 ஏவுகணை கருவிகளும் அடக்கம் என்பதும் இந்த ஏவுகணைகளை பாகிஸ்தான் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா பயன்படுத்த நடவடிக்கை எடுத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கிழக்கு எல்லையில் சீனா அச்சுறுத்தல் மற்றும் மேற்கு எல்லையில் பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளால் பதட்டம் என்கிற நிலையில், ரஷ்யாவிடம் தொடர்ந்து பாதுகாப்பு தொடர்பான சாதனங்களை இந்திய அரசு இறக்குமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே செர்ஜி லாவ்ரோவ் இந்திய பயணத்தின் போது பல முக்கிய ஆலோசனைகள் நடைபெறும் என அதிகாரிகள் கருதுகின்றனர். உக்ரைன் நாட்டில் சிக்கியிருந்த இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அரசு ஒரு புறம் உக்ரேன் நாட்டுக்கு நிவாரண பொருட்களை அனுப்பி உள்ளது. அதே சமயத்தில் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாடு இல்லாமல் இரண்டு பக்கங்களும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும் எனவும் சர்வதேச அரங்கில் கருதப்படுகிறது.