உலகில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வரும் நாடுகளில் ரஷ்யாவும் ஒன்றாக உள்ளது. குறிப்பாக, ரஷ்யாவில் பிறப்பு விகிதம் கடந்த 1990-லிருந்தே குறைந்து வருகிறது. உக்ரைனுக்கு எதிராக சுமார் இரண்டு வருட போரில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ரஷ்யர்கள உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
ரஷ்யாவின் மக்கள்தொகை 2023 ஜனவரில் 1ஆம் தேதி கணக்கின்படி 14 கோடியே 64 லட்சத்து 47 ஆயிரத்து 424 ஆகும். 1999-ம் ஆண்டு புதின் பதவி ஏற்றபோது இருந்ததைவிட இது குறைவானதாகும்.
இதையடுத்து, குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்கும் வகையில் பல நடவடிக்கைகளில் ரஷ்ய அரசு ஈடுபட்டுள்ளது. குழந்தை பெற்றுக் கொள்வதற்கு பல சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், கடந்த ஆண்டு அதிபர் விளாடிமிர் புதின், ”ரஷ்ய பெண்கள் 8 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். இதை நடைமுறையாக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தன்நாட்டில் குறைந்து வரும் பிறப்புவிகிதத்தை அதிகரிக்கும் வகையில், Ministry of Sex எனப்படும் பாலியல் துறை சார்ந்த அமைச்சகம் ஒன்றைத் தொடங்கும் நடவடிக்கையில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. ரஷ்ய நாடாளுமன்றத்தின் குடும்ப பாதுகாப்பு, குழந்தை வளர்ப்பு, தாய்மை மற்றும் குழந்தைப் பருவக் குழுவின் தலைவரும், புதின் ஆதரவாளருமான நினா ஒஸ்தானினாதான் (Nina Ostanina) இப்புதிய அமைச்சகம் உருவாக்குவது குறித்து ஆலோசனையை முன்வைத்துள்ளார். அந்த வகையில், இணையம் மற்றும் ஒளிக்குத் தடை, தாய்மார்களுக்கு ஊக்கத்தொகை, திருமண நிதியுதவி ஆகிய ஆலோசனைகளையும் தெரிவித்துள்ளார்.
இரவு 10 மணிமுதல் 2 மணிவரை இணையத்தைத் துண்டித்து, லைட்களை ஆப் செய்வதை கட்டாயமாக்குவது மூலம் திருமணமானவர்கள் நெருக்கமாக இருப்பது ஊக்குவிக்கும் என நம்பப்படுகிறது. இதை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கட்டாயமாக்குவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.
தாய்மார்களுக்கு நிதி உதவி அளிக்கலாம். குழந்தைகளை வளர்ப்பதற்காக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பணம் வழங்கப்படலாம். அவர்களின் ஓய்வூதிய கணக்கில் இதற்கான பணத்தை நேரடியாக வரவு வைக்கலாம்.
இளைஞர்கள் மத்தியில் திருமணத்தையும், குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கவும் முதல் டேட்டிற்கு அரசு நிதியுதவி வழங்கப்படலாம். ஒரு ஜோடிக்கு 5,000 ரூபிள் வரை வழங்கப்படலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. திருமணம் செய்துகொள்ளபவர்களுக்கு ரஷ்ய அரசு 26,300 ரூபிள் (இந்திய மதிப்பில் ரூ.23,122) வரை நிதியுதவி வழங்கப்படலாம். இந்த தொகையை ஹோட்டல் செலவுகளுக்கும் மற்றவைக்கும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.
அரசுப் பணியில் இருக்கும் பெண்கள் அரசு கேட்கும் அந்தரங்க கேள்விகளுக்கு மறுக்காமல் பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்தப் பதில்களில் இருந்துதான் ரஷ்ய அரசு ஆய்வு செய்து நிதியுதவி மற்றும் பிற முடிவுகளை எடுக்க முடியும் என்பதால் மறுக்காமல் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
1. நீங்கள் எந்த வயதில் உடலுறவு கொள்ள ஆரம்பித்தீர்கள்?
2. நீங்கள் ஹார்மோன் கருத்தடை (எ.கா. கருத்தடை மாத்திரைகள்) பயன்படுத்துகிறீர்களா?
3. நீங்கள் குழந்தையின்மையால் அவதிப்படுகிறீர்களா?
4. நீங்கள் எப்போதாவது கர்ப்பமாக இருந்தீர்களா? ஆம் எனில், எத்தனை முறை (அளவை எண்ணாகக் குறிப்பிடவும்)?
5. உங்களுக்கு ஏதேனும் பாலியல் நோய்கள் உள்ளதா?
மேலும், கபரோவ்ஸ்கில் (Khabarovsk)18 முதல் 23 வயதுடைய பெண்களுக்கு குழந்தை பிறந்தால் ரூ.97,311 வரை நிதியுதவி வழங்கும் திட்டத்தை ரஷ்ய அரசு துவங்கியுள்ளது. இதேபோல் செல்யாபின்ஸ்கில் (Chelyabinsk) இருக்கும் பெண்களுக்கு பிறக்கும் முதல் குழந்தைக்கு ரூ.9,19,052 வரை வழங்கப்படுகிறது. இந்த நிதியுதவி அல்லது ஊக்கத்தொகை என்பது ஒவ்வொரு பகுதிக்கும் மாறுபடும்.