உலகம்

பருவநிலை மாற்றத்தால் ஒவ்வொரு ஆண்டும் 4 செமீ மூழ்கும் கிராமம்!

பருவநிலை மாற்றத்தால் ஒவ்வொரு ஆண்டும் 4 செமீ மூழ்கும் கிராமம்!

webteam

புவி வெப்பமயமாதல் பிரச்னையால் வறட்சி, சுட்டெரிக்கும் வெயில், கடல்நீர் மட்டம் அதிகரிப்பு, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படுகின்றன. அந்த வகையில் ‌கடல்நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் சிடியோ பரிஹான் என்ற கிராமம் வெள்ளத்தில் மிதக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடலுக்கு நடுவே வீடுகட்டி குடியிருப்பதைப்போல வசித்து வருகின்றனர் இந்த கி‌ராம மக்கள்.

தலைநகர் மணிலாவிலிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிடியோ கிராமம், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 சென்டிமீட்டர் அளவிற்கு மூழ்கிக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நீர்மட்டத்தின் உயரம் அதிகரிக்க அதிகரிக்க கிராம மக்கள் மூங்கில்களை கொண்டு வீட்டின் உயரத்தையும் உயர்த்தி வருகின்றனர்.

அடிப்படை வசதிக்கே அள்ளாடும் இந்த கிராமம்,‌ சூரிய மின்‌சக்தி மூலமே மின்சாரம் பெறுகிறது. இங்கிருக்கும் ஒரே ஒரு கிணறுதான் முக்கிய நீர் ஆதாரமாகவும் உள்ளது. அந்த கிராமத்துக்கு மக்கள், கிணற்று நீரையே, குடிக்கவும், குளிக்கவும், சமையலுக்கும் பயன்படுத்துகின்றனர். இந்த கிராமத்திலிருந்த நீதிமன்றமும், தேவாலயமும் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட புயலில் மூழ்கடிக்கப்பட்டது.

சிடியோவைச் சேர்ந்த 16 வயதான டானிகா மார்டினெஸ், சுமார் அரை மணிநேர படகுப் பயணத்திற்கு பிறகு பள்ளிக்கு செல்வதாகவும், சில நேரங்களில் பெரிய அலைகளால் கடுமையான பாதிக்கப்படுவதாகவும் கூறுகிறார். தான் நன்றாக படித்து நல்ல‌ வேலைக்கு சென்‌ற பின்னர் தனது குடும்பத்தை இந்த கிராமத்திலிருந்து வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றுவிடுவேன் என டானிகா உருக்கமாக தெரிவித்துள்ளார்.