சுயெல்லா பிரேவர்மேன் ட்விட்டர்
உலகம்

தமிழ்நாடு to பிரிட்டன்: உயர் பதவிகள்.. சர்ச்சை பேச்சுகள்.. திடீர் நீக்கம்; யார் இந்த சுயெல்லா?

பிரிட்டனில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Prakash J

பிரிட்டனில் உள்துறை அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிரேவர்மேன் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாலஸ்தீன ஆதரவு பேரணியை அந்நாட்டு காவல்துறையினர் கையாண்டவிதம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததற்காக, சுயெல்லாவை பதவிநீக்கம் செய்து பிரதமர் ரிஷி சுனக் உத்தரவிட்டுள்ளார்.

யார் இந்த சுயெல்லா பிரேவர்மேன்?

தமிழகத்தைச் சேர்ந்த சுயெல்லா பிரேவர்மேன் லண்டனில் பிறந்து வளர்ந்தவர். இவரது தாயார் உமா பெர்ணான்டஸ் தமிழக மொரீஷியஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். தமிழ்நாட்டைச் சேர்ந்த உமா 1960களில் இங்கிலாந்தில் குடியேறினார். பின்னர் உமா, இங்கிலாந்தில் குடியேறிய கென்யாவைச் சேர்ந்த கோவா வம்சாவளியான கிரிஸ்டி பெர்னாண்டஸ் என்ற நபரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு பிறந்தவர்தான் சுயெல்லா.

2015இல் ஃபேர்ஹாமில் இருந்து இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டம் பயின்றுள்ள இவர், 2020-2022 வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் அட்டர்னி ஜெனரலாக பணியாற்றினார். பிரெக்ஸிட் ஆதரவாளராக இருந்த இவர், அந்நாட்டின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் அரசில் அட்டர்னி ஜெனரலாகவும் இருந்தார்.

இதையும் படிக்க: ”இந்திய இறையாண்மையை பின்பற்றவில்லை” - மணிப்பூரில் 4 மெய்தி போராளி அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை!

பிரதமர் பதவிக்குப் போட்டியிட்ட சுயெல்லா!

கடந்த (2022) பிரதமர் போட்டியில் பங்கேற்ற இவர், இரண்டாவதுச் சுற்றில் வெளியேறினார். மகப்பேறு விடுப்பு எடுத்த முதல் பெண் அமைச்சர் என்ற பட்டியலில் சுயெல்லா பிரேவர்மேன் என்ற பெயரே முதலிடத்தில் உள்ளது. அதாவது அமைச்சர்களும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை எடுக்கலாம் என்று விதிகள் இயற்றப்பட்ட பிறகு சுயெல்லா பிரேவர்மேன் இந்த முடிவை எடுத்தார். அதற்கு முன்புவரை அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றே விதிகள் இருந்தன. முன்னதாக, அந்நாட்டின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலகியதைத் தொடர்ந்து, புதிய பிரதமராக லிஸ் டிரஸ் அறிவிக்கப்பட்டார்.

லிஸ் டிரஸ் பிரதமரானதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், உள்துறை அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரீத்தி பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்தப் பதவிக்கு சுயெல்லா பிரேவர்மேன் நியமிக்கப்பட்டார். ஆனால் அரசாங்க விதிகளின் தொழில்நுட்ப மீறல் காரணமாக அவர் விரைவில் ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. அதற்கு முன்பாக, முன்னாள் பிரதமர் தெரசா மேயின்கீழ், பிரெக்சிட் துறையில் இளநிலை அமைச்சராக பணிபுரிந்தார். ஆனால் அவர் முன்மொழியப்பட்ட பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்திருந்தார். மேலும், ஒரு அரசியல்வாதியாக, பிரேவர்மேன் பிரிட்டிஷ் காலனித்துவத்தைப் பாதுகாத்ததுடன், புலம்பெயர்ந்தோர் மீது கடுமையான நிலைப்பாட்டை எடுத்தார், அவர்கள் ருவாண்டாவுக்கு நாடு கடத்தப்படுவதை ஆதரித்தார்.

இதையும் படிக்க: பி.எஃப். கணக்கு: தொழிலாளர்களுக்கு இன்பமான செய்தி.. தீபாவளிக்கு முன்பே வரவு! தெரிந்து கொள்வது எப்படி?

சுயெல்லா அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது ஏன்?

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே தொடங்கிய போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. காஸாவில் இருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் வான்வழி மற்றும் தரைவழியாகத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போருக்கு ஆதரவாகவும், எதிராகவும் உலகெங்கும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில் பிரிட்டனிலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. அச்சமயம் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதில் காவல்துறையினர் பாரபட்சம் பார்ப்பதாகவும், பாலஸ்தீன ஆதரவு பேரணிக்கு மட்டும் போலீஸ் அனுமதி தருவதாகவும் சுயெல்லா கூறியது சர்ச்சையானது.

அத்துடன், பாலஸ்தீன ஆதரவு பேரணியில் வன்முறை சம்பவங்கள் நடப்பதாக சுட்டிக்காட்டிய அவர், ஹாமஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் இந்த போராட்டத்திற்கு தொடர்பு இருப்பதாக பகீர் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். சுயெல்லாவின் கருத்துக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்து, அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தினர். தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது ஆளும் கர்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்தவர்களும் சுயெல்லாவின் கருத்தை கடுமையாக விமர்சித்தனர். முதலில் அமைச்சரவையில் இருந்து அவரை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் நீக்க மறுத்தார். இந்நிலையில், அழுத்தம் வலுப்பெற்றதால் பிரிட்டன் உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேனை பதவிநீக்கம் செய்து பிரதமர் ரிஷி சுனக் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: ஒடிசா: தனக்காக சிறை சென்ற காதலனை காத்திருந்து திருமணம் செய்த பெண்.. பெற்றோர் கொடுத்த விநோத தண்டனை!