உலகம்

கிடுகிடுவென உருகும் பனிக்கட்டிகள்.. எகிறும் கடல்நீர் மட்டம்: ஐ.நாவின் எச்சரிக்கை

கிடுகிடுவென உருகும் பனிக்கட்டிகள்.. எகிறும் கடல்நீர் மட்டம்: ஐ.நாவின் எச்சரிக்கை

rajakannan

பருவநிலை மாற்றத்தால் கடல் உணவுகள் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.

பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்னை தற்போது முன்னிலைக்கு வந்துள்ளது. உலகத் தலைவர்கள் பலரும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் எதிர்கால விளைவுகள் குறித்து பேசிவருகின்றனர். அதற்கான தீர்வுகளை காண்பதற்கு ஐ.நா சபையும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஐ.நா பருவநிலை மாற்றம் தொடர்பாக அறிக்கை ஒன்றினை தாக்கல் செய்துள்ளது. ஐ.நா சபையால் அமைக்கப்பட்ட அறிவியல் அறிஞர்கள் அடங்கிய காலநிலை மாற்றம் தொடர்பான குழு இந்த அறிக்கையை சமர்பித்துள்ளது. உலகத் தலைவர்கள் பருவநிலை மாற்றம் தொடர்பான தங்களது கொள்கைகளை வகுப்பதற்கு இது வழிமுறைகளை சொல்லியுள்ளது.

அந்த அறிக்கையில் மிகவும் முக்கியமாக பருவநிலை மாற்றத்தால் கடல் நீரின் மட்டம் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தால் கடல் உணவுகள் மற்றும் கடற்கரை பகுதிகளில் வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. வெப்பத்தின் அளவு அதிகரிப்பதால், பல பகுதிகளில் மீன் உள்ளிட்ட கடல் உயிரிகளின் எண்ணிக்கை குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. கடல் நீரின் ஆக்ஸிஜன் அளவு குறைந்துள்ளது. அமிலத்தின் அளவுகள் கூடியுள்ளது. கடற்கரையை ஒட்டியுள்ள சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. 

உலகம் வெப்பமடைவதால், கடல் நீர் மட்டம் அதிகரித்து, சக்திவாய்ந்த புயல்கள் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டினை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என எச்சரிக்கையை கடல் சீற்றங்கள் நமக்கு கூறிகொண்டே இருப்பதாக கடல் ஆய்வாளர் ஹன்ஸ் ஓட்டோ போர்னர் கூறியுள்ளார். இந்த பருவநிலை மாற்றம் மனிதர்களுக்கு கெடுதல்களை விளைவிக்கக்கூடும் எனவும் அவர் எச்சரிக்கிறார்.