“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில், அந்நாட்டு ராணுவ தளபதி அப்தெல் அல் பர்ஹான் மற்றும் துணை ராணுவப் படை தலைவர் மொகமத் ஹம்தன் டக்லோ ஆகிய இருவரும் இணைந்து கடந்த 2021-ம் ஆண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்தி இவர்கள் ஆட்சியை கைபற்றினர். இரண்டு ஆண்டுகளில் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காணமாக ராணுவ தளபதி மற்றும் துணை ராணுவ தளபதி ஆகியோரின் ஆதரவு படைகளுக்கு இடையே மோதல் உருவானது. இந்த மோதல்தான் தற்போது அங்கு உள்நாட்டு போராக வெடித்து வருகிறது.
குண்டுகளால் துளைக்கப்பட்ட கட்டடங்கள், கரும்புகைகளால் சூழப்பட்ட வானம், ஈக்கள் கூட அசையாத வெறிச்சோடிய தெருக்கள், திரும்பும் திசையெங்கும் ஒலிக்கும் துப்பாக்கி சத்தங்கள் என பூமியில் ஒரு நரகம் போல மாறியிருக்கும் சூடானில், சூப்பர் ஹீரோ ஆகியுள்ளனர் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர். ஹசன் திப்வா மற்றும் சமி அல்-கடா ஆகிய இருவரும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள். இவர்கள் பகுதி நேர வேலையாக டாக்ஸி ஓட்டுநர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர்.
சூடானில் மிக தீவிரமாக போர் தொடங்கியவுடன் முதல் இரண்டு நாள்களில் இவர்கள் உதவியற்றவர்களாக இருந்துள்ளனர். அவர்கள் சூடானின் தலைநகர் கார்ட்டூமில் உள்ள தங்கள் குடியிருப்பில் கதவுகளை தாழிட்டு உள்ளேயே தஞ்சம் அடைந்துள்ளனர். குண்டு வெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச்சூடுகள் தொடங்கும்போது வீட்டின் தாழ்வாரத்தில் தஞ்சம் புகுந்து தங்களை பாதுகாத்துக் கொண்டுள்ளனர். இப்படியே இவர்களின் நாள்கள் சென்றுக்கொண்டிருந்தபோது, போரின் ஐந்தாவது நாள், அதாவது ஏப்ரல் 19 அன்று இவர்களில் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் மறுபுறம் பேசிய ஒருவர், அவருக்கு டாக்ஸி தேவை என தெரிவித்துள்ளார்.
‘ஐக்கிய நாடுகள் சபையை சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர், உயர்தர குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். தற்போது போர் சூழல் காரணமாக அவர் தன் வீட்டில் சிக்கிக்கொண்டுள்ளார். இயந்திர துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட டிரக்குகள் அவளது குடியிருப்புக்கு வெளியில் நின்று போர் விமானங்களை நோக்கி தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளன. இதனால் அவரது குடியிருப்பு பகுதி கரும்புகையால் சூழ்ந்துள்ளது. அவரது நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. எந்த நேரத்திலும் அவர் இருக்கும் இடத்தில் குண்டு மழை பொழியலாம். மேலும் அவரது வீட்டில் தண்ணீர் கூட இல்லாமல் தவித்து வருகிறார். செல்போன் பேட்டரியும் 5% மட்டுமே வைத்துள்ளார். உங்களால் அவர்களை காப்பாற்ற முடியுமா?’ என சம்பவம் முழுவதையும் அழைப்பாளர் விளக்கியுள்ளார்.
இந்த வேலையை செய்தால் பணம் கிடைக்காதென திப்வாவுக்கும், அல்-கடாவுக்கும் நன்றாக தெரியும். வெளியில் என்ன நிலமையில் தங்கள் நகரம் உள்ளது என்பதையும் நன்றாகவே அறிந்திருந்தனர். இருந்தும் தங்கள் அழைப்பாளரின் பேச்சைக்கேட்டு அந்த பெண் அதிகாரி இருக்கும் இடத்துக்கு செல்ல தயாராகிய அவர்கள், வெளியில் வந்து தங்கள் காரை பார்த்து திகிலடைந்துள்ளனர். ஏனெனில் கார் மற்றும் தங்கள் தங்கியிருந்த கட்டடங்கள் முழுவதும் புல்லட் ஓட்டைகள் ஆக்கிரமித்திருந்துள்ளன. தெருக்களில் எரிந்த நிலையில் இருந்த வாகனங்கள், திரும்பிய பக்கம் எல்லாம் போராளிகள் இருந்துள்ளனர்.
இவை அனைத்தையும் கடந்து அவர்கள் வெளியில் வந்தபோது போராளிகளால் உருவாக்கப்பட்டிருந்த சோதனை சாவடியில் இருவரும் நிறுத்தப்பட்டு இருவரின் தொலைபேசியும் ஸ்கேன் செய்யப்பட்டு எங்கு செல்கிறார்கள் என முறையான பதில் அளித்த பிறகே முன்னோக்கி செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாங்கள் நேரில் பார்த்த சம்பவம் குறித்து பேசியுள்ள திப்வா, “நான்கு மைல் பயணிக்க எங்களுக்கு ஒரு மணி நேரம் ஆனது. நாங்கள் நரகத்தில் சென்றோம். இறுதியில் ஐ.நா அதிகாரியின் குடியிருப்புக்கு சென்றோம். அங்கு அவர் தனியாக இருந்தார். இத்தனனை நாள்களாக குளியறையில் மறைந்திருந்து தன்னை காப்பாற்றிக்கொண்டுள்ளார்.
மிகவும் பயந்துபோயிருந்த அவருக்கு நாங்கள் ஆறுதல் கூறி, அவரை முழுவதுமாக மறைக்கும் அங்கியால் போர்த்தி வெளியில் அழைத்து வந்தோம். பின்னர் ‘நாங்கள் டாக்ஸி ஓட்டுநர்கள். எங்கள் பயணி கர்ப்பமாக உள்ளார். அவரை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும்’ என போராளிகளிடம் பொய் சொல்லி, அவரை அங்கிருந்து மீட்டு கொண்டுவந்தோம். பின்னர் அந்த பெண்ணை ஐந்து நட்சத்திர அகதிகள் முகாமுக்கு அழைத்து சென்று சேர்த்தோம். அவர் எங்களை பற்றி விசாரித்த பிறகு, அவரது நண்பர்கள் சிலரையும் கூறி, ‘அவர்களையும் காப்பாற்ற முடியுமா?’ என வேண்டி கேட்டுக்கொண்டார்” என்று பகிர்ந்துக்கொண்டுள்ளனர்.
ஐ.நா அதிகாரியை காப்பாற்றிய பிறகு இந்த மாணவர்கள் செய்த அனைத்தும் வேறு ரகம். அடுத்த வாரத்திலேயே திப்வாவும், அல்-கடாவும் கடுமையான போர் மண்டலம் ஒன்றிலிருந்து டஜன் கணக்கான மக்களைக் காப்பாற்றியுள்ளனர். இவர்களால் காப்பாற்றப்பட்டவர்கள் மற்றும் இந்த மாணவர்கள் அளித்த நேர்க்காணல்களின் அடிப்படையில், இவர்கள் பல அச்சுறுத்தல்களை கடந்து தங்கள் உயிரை பணயம் வைத்தே பலரையும் காப்பாற்றியுள்ளனர். “இந்தப் பையன்களின் துணிச்சல் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அந்த மாணவர்கள் தாங்கள் காப்பாற்றிய யாரிடமும் பணம் கேட்கவில்லை. அவர்களது செயல் மிகவும் ஈர்க்கிறது” என அல்ஜீரிய தொழிற்சாலை மேலாளரான ஃபாரெஸ் ஹாடி கூறியுள்ளார்.
சூடானில் ஆறு நாள்களுக்கும் மேலாக இரண்டு ராணுவப் பிரிவுகளுக்கும் இடையே நடந்த போரில் இந்த இரு மாணவர்களும் குறைந்தது 60 பேரையாவது காப்பாற்றியிருப்பார்களாம். அதில் தென்னாப்பிரிக்க ஆசிரியர்கள், ருவாண்டா தூதர்கள், ரஷ்ய உதவிப் பணியாளர்கள் மற்றும் கென்யா, ஜிம்பாப்வே, ஸ்வீடன், அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த ஐ.நா அதிகாரிகள். ஓட்டுநர்கள் மற்றும் பாதுகாவலர்கள் என பலரும் அடங்குவர்.
இவர்கள் அனைவரும் அந்த மாணவர்களை பார்த்து சொன்ன ஒரே வார்த்தை என்ன தெரியுமா? “அவர்கள் சூப்பர் ஹீரோக்கள்”.