ஈரானில் கொரோனா வைரசுக்கு ஒரே நாளில் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈரான் நாட்டில் உள்ள 31 மாகாணங்களில், 6,566 பேருக்கு கொரோனா தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 49 பேர் உயிரிழந்துவிட்டனர்.
இதன் மூலம் அந்நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 194-ஆக அதிகரித்துள்ளது. சீனாவுக்கு வெளியே கொரோனா வைரசுக்கு ஈரானில்தான் அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே கொரோனாவால் ஈரானில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கவும் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திடவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நடவடிக்கை எடுக்குமாறு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே வங்கதேச நாட்டிலும் கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. இத்தாலியில் இருந்து திரும்பிய இரண்டு பேர் உள்பட மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை வங்கதேச சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.