உலகம்

தமிழ் ஈழம் மலர பொதுவாக்கெடுப்பு வேண்டும் - ஐ.நா.வில் வைகோ முழக்கம்

தமிழ் ஈழம் மலர பொதுவாக்கெடுப்பு வேண்டும் - ஐ.நா.வில் வைகோ முழக்கம்

rajakannan

தமிழ் ஈழ தேசத்திற்கு இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைக் கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். 

ஐ.நாவின் 36-வது மனித உரிமைகள் மாநாடு, ஜெனிவாவில் செப்டம்பர் 12-ம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தில், உலக நாடுகள் அனைத்திலும் நடைபெறும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் விவாதிக்கப்படும். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக செப்டம்பர் 17-ம் தேதி வைகோ ஜெனிவா சென்றார். 

இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து முன்னரே ஐ.நா. மனித உரிமை சபையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தற்போது இந்த விசாரணை அறிக்கையின் முழு விபரம் ஐ.நா சபையில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அதன் மீது நேற்று விவாதம் நடைபெற்றது. 

கடந்த 2009-ம் ஆண்டு இலங்கையில் போர் முடியும் தருவாயில் இலங்கை அரசிடம் சரணடைந்தோர்கள் விபரம், போருக்குப் பின்னரான தமிழர்களின் நிலை, தமிழர்களுக்கான தற்போதைய சூழல் ஆகியவை குறித்து இந்த ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்தக் கூட்டத்தில் வைகோ கலந்துகொண்டு இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது நடைபெற்ற உரிமைமீறல்கள் குறித்து உரையாற்றினார். அப்போது, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் இருந்து சிங்கள ராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தமிழ் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.