அமெரிக்கா pt web
உலகம்

அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை.. காரணம் என்ன?

PT WEB

உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு... வல்லரசு எனக் கூறப்படும் அமெரிக்காவில் 2020ஆம் ஆண்டுக்குப் பிறகே பொருளாதாரத்தில் நிச்சயமற்றதன்மை நிலவுகிறது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகான நாட்களில் அமெரிக்காவில் பணவீக்கம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்தது முக்கிய காரணம்.

விலைவாசி உயர்வைக் குறிக்கும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2023ஆம் ஆண்டு ஜூலை வரை கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியது ஃபெடரல் வங்கி. தற்போது, அமெரிக்காவில் கடன்களுக்கான வட்டி விகிதம் 5.25 சதவிகிதம் முதல் 5.50 சதவிகிதமாக உள்ளது. பணவீக்க விகிதத்தை 2 சதவிகிதத்திற்குள் கொண்டு வர இலக்கு நிர்ணயித்துள்ள ஃபெடரல் வங்கி, கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்காமல் இருந்து வருகிறது. 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்நாட்டில் கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவிகிதத்தில் இருந்து 0.50 சதவிகிதமாக இருந்தது.

2023ஆம் ஆண்டு டிசம்பரில் அமெரிக்காவில் பணவீக்க விகிதம் 3.4 சதவிகிதமாக காணப்பட்ட நிலையில், அடுத்து வந்த மாதங்களில் இறங்குமுகத்திலேயே இருக்கிறது. 2024ஆம் ஆண்டு ஜனவரியில் 3.1 சதவிகிதமாக குறைந்த பணவீக்கம், மார்ச் மாதத்தில் 3.5 சதவிகிதமாக அதிகரித்தது. ஆனால் அடுத்து வந்த 3 மாதங்களாக குறைந்துவரும் நிலையில், சென்ற ஜூனில் 3 சதவிகிதமாக குறைந்திருக்கிறது.

இதுஒருபுறமிருக்க, வேலைவாய்ப்பின்மை என்பதுதான் அந்நாட்டில் நிலவும் பிரச்னைகளில் முக்கியமான ஒன்று. ஜனவரி மாதம் வேலைவாய்ப்பின்மை விகிதம் 3.7 சதவிகிதமாக இருந்ததாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அடுத்தடுத்து வந்த மாதங்களில் பார்த்தோமானால் வேலைவாய்ப்பின்மை விகிதம் ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது. மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் முறையே 3.8 சதவிகிதம், 3.9 சதவிகிதம், 4 சதவிகிதம் என உயர்ந்தது. ஜூனில் 4.1 சதவிகிதமாக காணப்பட்ட வேலைவாய்ப்பின்மை விகிதம் ஜூலையில் 4.3 சதவிகிதமாக உயர்ந்த்திருக்கிறது.

பணவீக்கம் குறைந்துவருவதால் வரும் செப்டம்பரில் கடன்களுக்கான வட்டி விகிதங்களை அமெரிக்கா குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு சர்வதேச முதலீட்டாளர்களிடம் இருந்து வருகிறது. ஆனால், சமீபத்தில் வெளியான ஐஎஸ்எம் உற்பத்தி குறியீடு திடீரென சரிவு கண்டது, 10 ஆண்டுகளுக்கான கடன்பத்திரங்களின் மதிப்பு குறைந்து வருவது போன்றவையும் அந்நாட்டை மீண்டும் பொருளாதார மந்தநிலைக்கு எடுத்துச்செல்லுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.