லெபனான் எக்ஸ் தளம்
உலகம்

லெபனான்: பேஜர்கள் திடீரென வெடித்துச் சிதறியது ஏன்? வெளியான அதிர்ச்சி தகவல்! அமெரிக்கா சொல்வது என்ன?

Prakash J

லெபனான் நாட்டில் இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லா அமைப்பினர், தகவல் தொடர்புக்காக கையடக்க கருவியாக பேஜர்களைப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், ஹிஸ்புல்லா அமைப்பினர் தங்களுடன் தொடர்புடையவர்களை மொபைல் போன்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. காசாவில் நடைபெற்று வரும் போர் காரணமாக, தொழில்நுட்பத்தில் இஸ்ரேலின் மீறல்களைத் தவிர்ப்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெடித்துச் சிதறிய பேஜர்கள்

இந்த நிலையில் தெற்கு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பலர் வைத்திருந்த கையடக்க பேஜர்கள் வெடித்தன. இதைத் தொடர்ந்து பேஜர்களைப் பயன்படுத்தும் ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர்களும் தொடர்ச்சியாக வெடித்தன. லெபனானில் உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் 3:30 மணியளவில் (ஐஎஸ்டி மாலை 6 மணி) வெடிப்புகள் நிகழ்ந்தன. அதேபோல், தெற்கு புறநகர்ப் பகுதிகளிலும் அவர்கள் வைத்திருந்த பேஜர்கள் வெடித்தன. மேலும், லெபனானுக்கு வெளியேயும் பேஜர்கள் வெடித்தன. மொத்தத்தில் நாட்டில் 1,000க்கும் மேற்பட்ட பேஜர்கள் வெடித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் 9 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 2,800 பேர் காயமடைந்திருப்பதாகவும், அதில் 200க்கும் மேற்பட்டவர்கள் மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்தாண்டு அக்டோபர் முதல் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுடன் போர் நடத்திவரும் நிலையில், நேற்று (செப்.17) நடைபெற்ற இச்சம்பவம் மிகப்பெரிய பாதுகாப்பு விதிமீறல் என ஹிஸ்புல்லா குற்றம்சாட்டியுள்ளது.

சைபர் தாக்குதலால் லித்தியம் பேட்டரிகள் அதிக வெப்பமடைந்ததால் பேஜர் வெடிப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் இதுகுறித்து ஹிஸ்புல்லாவில் உள்ள தொடர்புடைய அதிகாரிகள், விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், இந்த நிகழ்வு தொடர்பாக இஸ்ரேல் இதுவரை வாய் திறக்கவில்லை.

இந்த விபத்து குறித்து இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா, “ஈரானுக்கு பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம்” என்று வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், “அமெரிக்கா இதில் ஈடுபடவில்லை என்பதை என்னால் சொல்ல முடியும். இந்த சம்பவம் குறித்து அமெரிக்கா முன்கூட்டியே அறிந்திருக்கவில்லை. இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான மோதலுக்கு நல்ல தீர்வையே நாங்கள் காண விரும்புகிறோம்" என மில்லர் தெரிவித்துள்ளார்.

இந்த பேஜர்கள் மர்மமான முறையில் வெடித்துச் சிதறியதன் பின்னணியில், இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே 5 ஆயிரம் பேஜர்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்துள்ளனர். தைவானை சேர்ந்த கோல்ட் அப்பலோ என்ற நிறுவனம், இந்த பேஜர்களை தயாரித்துள்ளதாக தகவல் வெளியானது.

ஆனால், “அந்த பேஜர்களை நாங்கள் தயாரிக்கவில்லை. ஐரோப்பாவில் உள்ள ஒருநாட்டில் எங்கள் பெயரை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள பிஎசி என்ற நிறுவனம் இந்த பேஜர்களை தயாரித்துள்ளது” என்று கோல்ட் அப்பலோ தெரிவித்துள்ளது. இந்த பேஜர் கருவிகளுக்கு, வெடிக்கும் போர்டு கருவி ஒன்றை பொருத்தி, அதில் வெடிமருந்தை நிரப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பேஜரில் கடவுச்சொல் (Code) வந்த உடன் வெடிக்கும் வகையிலான போர்டு கருவியை மொசாட் பொருத்தியிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் முன்னாள் உளவுத்துறை ஆய்வாளரான டேவிட் கென்னடி, “ஆன்லைனில் பகிரப்பட்ட வீடியோக்களில் காணப்படும் வெடிப்புகள், ரிமோட் மற்றும் டைரக்ட் ஹேக் என்பதால் பேஜரை ஓவர்லோட் செய்து லித்தியம் பேட்டரி வெடிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. பேஜர்களில் வெடிமருந்துகள் பொருத்தப்பட்டு, ஒரு குறிப்பிட்ட செய்தி கிடைத்தவுடன் மட்டுமே வெடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.